2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜோன் பிரென்னனின் பாதுகாப்பு அனுமதி நீக்கம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) முன்னாள் பணிப்பாளரான ஜோன் பிரென்னனின் பாதுகாப்பு அனுமதியை, அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தமையின் காரணமாகவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.அமெரிக்காவின் அதியுச்ச இரகசியங்களை அறிவதற்காக, ஒவ்வொரு படி நிலையானதுமான பாதுகாப்பு அனுமதிகள் காணப்படுகின்றன. சி.ஐ.ஏ-இன் பணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு, உச்சநிலை அனுமதி வழங்கப்படும். அப்பதவிகளிலிருந்து அவர்கள் விலகினாலும், அவ்வனுமதிகள் தொடர்ந்தும் அவர்களிடம் காணப்படுவது வழக்கமாகும். நாட்டில் அவசர நிலையொன்று ஏற்பட்டால், அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்துவதை இலகுபடுத்துவது, அதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

வெள்ளை மாளிகையில், ஜனாதிபதியின் உதவியாளராகப் பணியாற்றிய கறுப்பினப் பெண்ணான ஒமரோஸா மனிகௌல்ட் நியூமன், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்து, நூலொன்றை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து, ஒமரோஸாவைக் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி, "தாழ்ந்த உயிர்" என அவரைக் குறிப்பிட்டதோடு, "நாயைப் போன்று அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்" என்றும் விமர்சித்திருந்தார். அவரது இவ்விமர்சனங்கள், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டன என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இவ்விமர்சனங்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்த பிரென்னன், "கண்ணியம், நாகரிகம், நாணயம் ஆகியவற்றுக்கான ஆகக்குறைந்த தரத்துக்களவுக்கு ஏற்பக் கூட நீங்கள் இல்லாமலிருப்பது வியக்கவைக்கிறது. ஜனாதிபதியாகவோ அல்லது நல்ல, கண்ணியமான, நேர்மையான மனிதராகவோ இருப்பது என்றால் என்னவென்பதை நீங்கள் எப்போதுமே புரிந்துகொள்ள மாட்டீர்கள் போல இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்தே, பிரென்னனின் பாதுகாப்பு அனுமதியை நீக்கும் அறிவிப்பை, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. பிரென்னனின் விமர்சனத்தை விசேடமாகக் குறிப்பிடாமல், "வெறித்தனமான கருத்துகளை" அவர் வெளியிட்டார் என, வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

அத்தோடு, பிரென்னன் தவிர, ஜனாதிபதி மீது விமர்சனங்களை வெளிப்படுத்திவரும் ஏனைய முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பு அனுமதிகளைப் பறிப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும், வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. இதில், புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி, முன்னாள் தேசிய புலனய்வுப் பணிப்பாளர் ஜேம்ஸ் கிளப்பர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் றைஸ், முன்னாள் தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் முன்னாள் பணிப்பாளர் மைக்கல் ஹெய்டர், முன்னாள் பிரதி சட்டமா அதிபர் சாலி யேற்ஸ் ஆகியோரின் பாதுகாப்பு அனுமதிகளைப் பறிக்கப் போவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .