2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

டோக்கியாவைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி: 23 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானை அண்மையில் தாக்கிய சூறாவளிகளில் மோசமான சூறாவளியொன்றான ஹகிபிஸ்ஸானது 23 பேரைக் கொன்றதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு தலைநகர் டோக்கியோவை முடக்கிய நிலையில், இதனால் ஏற்பட்ட வெள்ளத்துடன் போராடுவதற்கும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும் ஆயிரக்கணக்கான படைகளையும், மீட்புப் பணியாளர்களையும் ஜப்பான் இன்று அனுப்பியுள்ளது.

மத்திய, கிழக்கு ஜப்பானின் பாரியளவு தாழ்நிலப்பகுதியை ஹகிபிஸ் சூறாவளி வெள்ளக் காடாக்கியுள்ளதுடன், ஏறத்தாழ அரை மில்லியன்ப் வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டித்த நிலையில் 16 பேரைக் காணவில்லை என ஜப்பான் அரச தொலைக்காட்சி என்.எச்.கே தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் நரிட்டா, ஹனெடா விமானநிலையங்களில் தரையிறங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோதும் நேற்று 800க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்தானதாக என்.எச்.கே கூறியுள்ளதோடு, மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான ஷின்கன்சென் புல்லட் ரயில் சேவைகளும் இரத்தானதாக கூறியுள்ளது.

டோக்கியோவைச் சூழவுள்ள கன்டோ பிராந்தியத்துக்கான மழை எச்சரிக்கைகளை அதிகாரிகள் நீக்கியுள்ள நிலையில் கடைகள் மீளத் திறந்துள்ளதுடன், பல ரயில் சேவைகள் மீள ஆரம்பித்துள்ளபோதும், கிழக்கு ஜப்பானில் நிரம்பி வழிகின்ற ஆறுகளால் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசர கூட்டமொன்றக் கூட்டியிருந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, இடர் முகாமைத்துவத்துக்கான அமைச்சரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜப்பானின் நகனோ மற்றும் வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான அந்நாட்டின் தற்காப்புப் படைகளின் 27,000 அங்கத்தவர்கள், தீயணைப்புப்படைவீரர்கள், பொலிஸார், கரையோரக்காவற்படை உறுப்பினர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .