2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டமாஸ்கஸ்ஸைச் சுற்றி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்

Editorial   / 2018 மே 23 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியத் தலைநகர் டமாஸ்கஸ்ஸைச் சூழவுள்ள அனைத்துப் பகுதிகளும், சிரிய அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பித்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குப் பின்னர் முதன்முறையாக, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து போராளிகளை இவ்வாண்டு ஏப்ரலில் விரட்டிய பின்னர், அல்-ஹஜார் அல்-அஸ்வட் மாவட்டத்திலிருந்தும் அதற்கு அருகிலுள்ள யார்மோக் பலஸ்தீன அகதிகளின் முகாம் பகுதியிலிருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை விரட்டுவதற்கான முயற்சிகளில், சிரிய அரசாங்கப் படைகளும் அதற்கு ஆதரவான படைகளும் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், தொலைக்காட்சி மூலம் தகவல் வழங்கிய சிரிய இராணுவத்தின் உயர் கட்டளைப் பிரிவு, இரு பகுதிகளிருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு விரட்டப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தியது.

“டமாஸ்கஸ்ஸும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் டமாஸ்கஸ் நாட்டுப் பகுதியும் கிராமங்களும், முழுவதும் பாதுகாப்பான பகுதிகளாக மாறியுள்ளன. சிரியா முழுவதும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போட்டியிடும் வகையில், இராணுவத்தின் நடவடிக்கை தொடரும்” என, அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இப்பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், போர் ஆரம்பித்த காலங்களுக்குப் பின்னர், மிகவும் பலமான நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் காணப்படுகிறார்.

ஜனாதிபதி அசாட்டுக்கு எதிரான போராளிகள் இப்போது, துருக்கி, ஜோர்டான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிகளிலுள்ள இடங்களிலேயே ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. அதேபோல், துருக்கியும் ஐக்கிய அமெரிக்காவும், சிரிய அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே, சில பகுதிகளில் நிலைத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .