2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டூமாவில் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் டூமாவில், இவ்வாண்டு ஏப்ரலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தில், பல்வேறான குளோரின் ஏற்றப்பட்ட இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என, இரசாயன ஆயுதங்களைத் தடுப்பதற்கான அமைப்பின் முதற்கட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 7ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, சுமார் ஒரு வாரத்தின் பின்னர், இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக, இவ்வமைப்பின் குழுவொன்று, அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தது.

இந்நிலையிலேயே, இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, வெடிக்கக்கூடிய பொருட்களோடு, குளோரின் ஏற்றப்பட்ட இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும், இதன் மூலமாக, ஆயுதமாக, குளோரின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது எனவும், அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலின் காரணமாக, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன இணைந்து, சிரிய அரசாங்கப் படைகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தன.

எனினும், உண்மையில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதில், சிரியா, சிரியாவை ஆதரிக்கும் ரஷ்யா ஆகியவற்றோடு, ஐ.அமெரிக்கா, ஐ.இராச்சியம், பிரான்ஸ் ஆகியன முரண்பட்டிருந்தன.

அதேபோன்று, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு, சோதனையாளர்களை அனுமதிப்பதில் இழுபறி நீடித்திருந்தது. இதன்போது, அவ்விடத்திலிருந்து ஆதாரங்களை அழிக்கும் பணியில் ரஷ்யா ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .