2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டொரான்டோ தாக்குதலாளியின் பேஸ்புக் பதிவு தொடர்பில் விசாரணை

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடகைக் காரொன்றை, பாதசாரிகள் மீது மோதி, 10 பேரைக் கொன்றாரெனவும் 13 பேரைக் காயப்படுத்தினாரெனவும் குற்றஞ்சாட்டப்படும் நபர், தாக்குதலுக்கு முன்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தாரெனக் கூறப்படும் பகிர்வு தொடர்பாகவும், கனேடியப் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அலெக் மினாஸின் என்ற சந்தேகநபர் மீது, 10 பேரைக் கொன்றமைக்காகவும் 13 பேரைக் கொல்ல முயன்றமைக்காகவும், ஏற்கெனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்த செய்தில், “இன்செல் புரட்சி ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

“இன்செல்” என்பது, “விரும்பி ஏற்படாத பிரம்மச்சாரியம்” என, இணையத்தளங்களில் குறிப்பிடும் ஒரு வகையான குழுவினர் பயன்படுத்தும் சொல்லாகும். இவ்வாறானவர்கள், காதல் உறவுகளில் ஈடுபட விரும்பினாலும், அதற்கான வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் ஆவர். பெண்களுக்கெதிரான வன்முறை, பாகுபாடு ஆகியவற்றை ஊக்குவிப்பவர்களாக, இவர்கள் உள்ளனர்.

எனவே, காதல் துணையைப் பெற முடியாத உணர்வால், இத்தாக்குதல் உந்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவரது அச்செய்தியில், “4chan” என்ற இணையக் குழுமத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழுமம், கடும்போக்கு வலதுசாரிகள் அதிகமாக இருப்பதற்காக அறியப்பட்ட இடமாகும்.

அதேபோல், ஐ.அமெரிக்காவின் கலிபோர்னியாவில், 2014ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி, 6 பேரைக் கொன்று, 13 பேரைக் காயப்படுத்திய எலியட் றொட்ஜெரின் பெயரையும், அவர் தனது பேஸ்புக் பகிர்வில் குறிப்பிட்டிருந்தார். றொட்ஜெரும், “விரும்பி ஏற்படாத பிரம்மச்சாரியம்” என்ற பிரிவின் உறுப்பினர் என்று கருதப்படுபவராவார்.

இந்த பேஸ்புக் பகிர்வு தொடர்பாகவும், தமது விசாரணைகள் இடம்பெறுவதை, கனேடியப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .