2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்ப் குழு மீதான அழுத்தம் அதிகரிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும், விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரின் குழு, ட்ரம்ப் பிரசாரக் குழுவைச் சேர்ந்த இருவர் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவரின் மருமகனான அலெக்ஸ் வான் டெர் ஸ்வான், வொஷிங்டன் டி.சியிலுள்ள ஐ.அமெரிக்க மாவட்ட நீதிமன்றமொன்றில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டார். மல்லரின் விசாரணைகளின் போது, பொய் கூறினார் என்பதே, அலெக்ஸ் மீதான குற்றச்சாட்டாகும்.

33 வயதான இவர், நெதர்லாந்துப் பிரஜையாவார். தன் மீதான குற்றச்சாட்டுகளை இவர் ஏற்றுள்ள நிலையில், இவருக்கான தண்டனை விவரம், ஏப்ரல் 3ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

2012ஆம் ஆண்டில், உக்ரைன் தொடர்பாக போல் மனஃபோர்ட், றிக் கேற்ஸ் ஆகியோருக்காக, அலெக்ஸ் ஆற்றிய பணிகள் தொடர்பாகவே, இவ்விசாரணை அமைந்துள்ளது. ட்ரம்ப் பிரசாரக் குழுவின் முகாமையாளராக இருந்த மனஃபோர்டும் அவரது உதவியாளராகச் செயற்பட்ட கேற்ஸும், ஏற்கெனவே இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்கள் மீது பணச்சலவைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவர்களின் சட்டத்தரணி மீதான வழக்கு நடவடிக்கை, இவர்கள் இருவரும், இவ்விசாரணைகளில் ஒத்துழைப்பதற்கான அழுத்தத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பிலும், ரஷ்யாவுடன் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்குத் தொடர்புகள் காணப்பட்டனவா என்பது தொடர்பிலும் விசாரிப்பதே, றொபேர்ட் மல்லர் தலைமையிலான விசாரணைக் குழுவின் பிரதான பணியாக இருந்தாலும், இவ்விடயங்களோடு தொடர்புடைய விடயங்களை விசாரிப்பதற்கும், அக்குழுவுக்கு அதிகாரமுள்ளது. அதனடிப்படையிலேயே, அலெக்ஸ் மீதான புதிய குற்றச்சாட்டு அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .