2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப் சம்மதம் என்கிறார் மக்ரோன்; இல்லை என்கிறது வெள்ளை மாளிகை

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கப் படைகளை, சிரியாவிலிருந்து உடனடியாக விலக்கும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிலிருந்து அவரை மாற்றி, நீண்டகாலத்துக்குப் படைகளை அங்கு வைத்திருப்பதற்கு அவரைச் சம்மதிக்க வைத்துள்ளதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது, ஐ.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றோடு இணைந்து, கடந்த சனிக்கிழமை தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையில், தனது நாட்டு ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் (15) கருத்துத் தெரிவித்த போதே, ஜனாதிபதி மக்ரோன், இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.அமெரிக்கப் படைகளை, சிரியாவிலிருந்து உடனடியாக விலக்க வேண்டுமென்பது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிலைப்பாடாக இருந்த நிலையில், அதிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்ததாக, ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

அத்தோடு, இணைந்த தாக்குதல்களை, இரசாயனத் தொழிற்சாலைகள், ஆய்வுகூடங்கள் ஆகியன மீது மட்டுப்படுத்துவதற்கும், ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சம்மதிக்க வைத்ததாக, அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆரம்பத் திட்டத்தில், இவ்வாறு இரசாயனத் தொழிற்சாலைகள் மீது மாத்திரம் தாக்குதல் நடத்துவது என்பது காணப்படவில்லை எனவும், அதை மாற்றியதாகவும், அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஜனாதிபதி மக்ரோனின் இந்த அறிவிப்பு வெளியாகிய பின்னர், அறிக்கையொன்றை வெளியிட்ட வெள்ளை மாளிகை, சிரியாவிலிருந்து ஐ.அமெரிக்கப் படைகள், இயலுமானளவுக்கு விரைவில் திரும்ப வேண்டுமென, ஜனாதிபதி ட்ரம்ப் இன்னமும் விரும்புகிறார் எனத் தெரிவித்தது.

“ஐ.அமெரிக்காவின் நோக்கம், இன்னமும் மாற்றமடையவில்லை” என, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சான்டர்ஸ் வெளியிட்ட அறிக்கை, மேலும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X