2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்: வெனிசுவேலாவில் இராணுவப் பயிற்சி

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவில் காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில், அந்நாடு மீதான இராணுவ நடவடிக்கை எடுப்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில், தேசிய மட்டத்தில் இராணுவப் பயிற்சிகளை நடத்துமாறு, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார்.

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் இடம்பெற்ற பேரணியொன்றில், நேற்று முன்தினம் (14) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “வெனிசுவேலா தேசத்தின் ஒருங்கிணைப்பட்ட இராணுவப் பாதுகாப்புத் திட்டத்துக்காக, தேசிய சிவில் - இராணுவப் பயிற்சிக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு, இராணுவப் படைகளின் பணியாட்தொகுதிப் பிரதானிக்கு, நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சிகள், இம்மாதம் 26, 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

ஏற்கெனவே, நாட்டில் அரசியல் ரீதியான அழுத்தங்களை எதிர்கொண்டுவரும் ஜனாதிபதி மதுரோவும் அவரது அரசாங்கமும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய அச்சுறுத்தலை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஏற்கெனவே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை, “பைத்தியக்காரத்தனமானது” என வர்ணித்திருந்த பாதுகாப்பு அமைச்சர், வெனிசுவேலா விடயத்தில், ஐ.அமெரிக்காவின் முகமூடி கிழிந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மதுரோ, ஐ.அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன், “தாங்கிகள், விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாட்டைப் பாதுகாப்பேன்” என்று தெரிவித்தார்.

அரசமைப்புச் சபைக்கான தேர்தல், எதிரணியினர் மீதான அடக்குமுறை, பொருளாதார வீழ்ச்சி ஆகியன காரணமாக, அதிகளவு எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி மதுரோ, ஐ.அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக, அதிகரித்த ஆதரவைப் பெற்றுக் கொள்வார் என, அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .