2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்ப்பின் அறிவிப்பால் குழப்பத்தில் படையினர்

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இணைந்த படைப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், சிங்கப்பூரில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, இவ்வறிவிப்பை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டிருந்தார். ஆனால், இவ்வறிவிப்புக்கு முன்னதாக, இவ்விடயம் தொடர்பில் தென்கொரியாவுடன் அவர் கலந்துரையாடி

இருக்கவில்லை.

இதனால், ஜனாதிபதி ட்ரம்ப் சொல்ல வந்தது என்னவென்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக, தென்கொரியத் தரப்பு, முன்னர் கூறியிருந்தது.

இந்நிலையில், தற்போது கருத்துத் தெரிவித்துள்ள ஐ.அமெரிக்க இராணுவம், தென்கொரியாவிலுள்ள தமது படைகள், முழுமையான பயிற்சிபெற்று, தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஐ.அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பயிற்சிகளை, “போர் விளையாட்டுகள்” என, ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்திருந்த நிலையில், என்ன வகையான பயிற்சிகள், அவ்வாறான “போர் விளையாட்டுகளுக்குள்” உள்ளடங்குகின்றன எனத் தெரியாது எனத் தெரிவித்த ஐ.அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர், எனினும், புதிய வழிகாட்டல்களின் அடிப்படையில், பாரிய, இணைந்த பயிற்சிகளுக்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக் கொண்டார்.

எனினும், அங்குள்ள தமது படைகளைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அதை என்ன வழியில் செய்ய முடியுமென்பது, இதுவரையில் தெளிவில்லாமலேயே உள்ளது எனவும் அவர் ஏற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .