2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப்பின் ஆலோசகர் தொடர்பில் சர்ச்சை வலுக்கிறது

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் காலத்தில், அவருக்கு ஆலோசகராகச் செயற்பட்ட கார்ட்டர் பேஜ் தொடர்பான சர்ச்சைகள் வலுத்துள்ளன. அவர் மீதான உளவுத்துறையின் கண்காணிப்பே, இப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்ய அரசாங்கத்தின் ஆலோசகராகச் செயற்படுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கார்ட்டர் பேஜைக் கண்காணிப்பதற்கான அனுமதியை, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ) கோரி, அதற்கான அனுமதியை, நீதிமன்றத்திடமிருந்து பெற்றிருந்தது. 

ஆனால், இவ்வனுமதியைப் பெறுவதற்காக, நீதிமன்றத்திடம் எப்.பி.ஐ பொய் கூறியது என, ஜனாதிபதி ட்ரம்ப்பும் குடியரசுக் கட்சியினரும் கூறிவந்தனர். இதன் விளைவாக, அனுமதி கோரப்பட்ட மனு, தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், தனது பிரசாரக் குழு, சட்டவிரோதமான முறையில் வேவுபார்க்கப்பட்டது என, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கான எந்தவோர் ஆதாரத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

மறுபக்கமாக, ரஷ்ய அரசாங்கத்தின் முகவர் அல்லது ஆலோசகர் என்ற அடிப்படையில் தான் விளிக்கப்படுவது, உண்மைக்குப் புறம்பானது என, கார்ட்டர் பேஜ் குறிப்பிடுகிறார். ஆனால், இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில், ரஷ்ய அரசாங்கத்தின் “உத்தியோகபூர்வமற்ற ஆலோசகர்” என, தன்னைத் தானே பேஜ் விளித்திருந்த நிலையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, “அவை, உத்தியோகபூர்வமற்றவை” எனவும், சிலருடன் கலந்துரையாடுவது மாத்திரம் தான் என, அவர் கூறினார். 

அதேபோல், கண்காணிப்புக்கான உத்தரவு பெறப்பட்டமை தொடர்பாக, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் உறுப்பினர்கள், கட்சிகளின் அடிப்படையில் இரண்டு அறிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தனர். 

தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வெளிப்படுத்திய வாதங்கள் சரியானவை எனவும், குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டவை, தவறானவை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், இரண்டு தரப்புகளும் இவ்விடயத்தில் தங்கள் கருத்து மோதல்களைத் தொடர்வதோடு, ஜனாதிபதியும் இவ்விடயத்தில் தலையிட்டுள்ளமை, இப்பிரச்சினை மேலும் நீடிக்குமென்பதைக் காட்டுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .