2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு லத்தீன் அமெரிக்கா கண்டனம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா மீது, இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு எதிராக, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அண்மைக்காலத்தில், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பல நாடுகள், வெனிசுவேலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது வெனிசுவேலாவுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமைக்கு, அந்நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள், அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளன. நாட்டின் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இல்லாதததாக்கி, அரசமைப்புச் சபையொன்றுக்கான தேர்தலை நடத்தியமையின் மூலம், அவருக்கெதிரான எதிர்ப்பு, அதிகரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், வெனிசுவேலா மீதான இராணுவ நடவடிக்கைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார்.

வெனிசுவேலாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பெரு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, ஐக்கிய நாடுகளின் கொள்கைகளுக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டது.  மெக்ஸிக்கோவும் கொலம்பியாவும், தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இதில் குறிப்பாக, வெனிசுவேலாவின் அரசியல் போக்குக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமது நாட்டுக்கான வெனிசுவேலாவின் தூதுவரை, நாட்டிலிருந்து வெளியேற்றும் முடிவை பெரு எடுத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த வெனிசுவேலாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோர்ஜ் அர்ரேஸா, “பலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான கண்டனத்தையும் நிராகரிப்பையும் வெளிப்படுத்திய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்களுக்கு, எமது நன்றியறிதலை வெளிப்படுத்துகிறோம். இந்த நாடுகளில் சில, எமது இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் எதிரான நிலைப்பாடுகளை அண்மைய நாட்களில் எடுத்த போதிலும், ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் இந்தப் பிரகடனங்களை நிராகரித்துள்ளன” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .