2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ட்ரம்ப்புக்குத் தான் பெரிய பாராட்டு’

Editorial   / 2018 ஜனவரி 11 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றமைக்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தான் பெரிய பாராட்டுப் போய்ச் சேர வேண்டுமென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஜனவரியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா தொடர்பில் மோதல் போக்கான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகிறார். வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும் ஜனாதிபதி ட்ரம்ப்பும், அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக, அவ்வப்போது மாறி மாறி மிரட்டி வந்தனர்.

அதேபோல், வடகொரியாவால் மேற்கொள்ளப்படும் ஏவுகணைச் சோதனைகளும் அணுக்குண்டுச் சோதனைகளும், கடந்தாண்டில் அதிகரித்ததோடு, அதிக பலம் கொண்டவையாக மாறியிருந்தன. இதனால், ஐ.அமெரிக்கா தலைமையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தடைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே, பாதுகாப்புச் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வடகொரியா மீது அழுத்தத்தை ஏற்படுத்தின எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மூன், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, அதற்கான பாராட்டுப் போய்ச் சேர வேண்டுமெனக் கூறியதோடு, அதற்கான நன்றியறிதலை வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

வடகொரியாவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்பதிலும், ஜனாதிபதிகளான மூனுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையில், பாரிய வித்தியாசம் காணப்படுகிறது எனக் கருதப்படுகிறது. முன்னையவர், சமாதான முறையில், பேச்சுவார்த்தைகள் மூலமாக இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகமான கவனத்தைச் செலுத்த, பின்னையவரோ, இராணுவ ரீதியிலான தீர்வு குறித்து அதிக நம்பிக்கைகளைக் கொண்டவராக இருக்கிறார்.

இவற்றுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, தென்கொரிய ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தமை, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .