2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ட்ரம்ப்புடன் குடியரசுக் கட்சியினர் முரண்பாடு

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவால் வெளியிடப்பட்ட குறிப்பு, தன் மீதான குற்றச்சாட்டுகளை இல்லாது செய்கிறது என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை, அவரது கட்சியினரே மறுக்கின்றனர்.

ஜனாதிபதியின் கட்சியான குடியரசுக் கட்சியே, பிரதிநிதிகள் சபையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், அவர்களால் கட்டுப்படுத்தப்படும் புலனாய்வுச் செயற்குழு, கடந்த வாரம், குறிப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில், ட்ரம்ப் பிரசாரக் குழுவின் ஆலோசகரான கார்ட்டர் பேஜ் என்பவரைக் கண்காணிப்பதற்காக, கூட்டாட்சிப் புலனாய்வு முகவராண்மை (எப்.பி.ஐ) பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவு, போதுமான நடைமுறைகளைப் பின்பற்றிப் பெறப்பட்டிருக்கவில்லை என, அக்குறிப்புக் குற்றஞ்சாட்டியது. எப்.பி.ஐ, நீதித் திணைக்களம், ஜனநாயகக் கட்சியினர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி, இக்குறிப்புப் பகிரங்கமாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது வெளியாகியுள்ள இக்குறிப்பு, விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லர் தலைமையிலான விசாரணை, பழிவாங்கல் நடவடிக்கை எனவும் பெரும் அவமானத்துக்குரியது என்றும் குறிப்பிட்டதோடு, தன் மீது குற்றச்சாட்டுகள் இல்லையென்பதை அது காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

ஆனால், அப்புலனாய்வுச் செயற்குழுவில் இடம்பெற்றிருந்த குடியரசுக் கட்சியின் ட்ரே கவ்டி, அதை மறுத்தார். றொபேர்ட் மல்லருக்கான “100 சதவீதமான ஆதரவை நான் கொண்டுள்ளேன்” என, அவர் உறுதிப்படுத்தினார்.

அவரைப் போன்றே, இச்செயற்குழுவில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களான வில் ஹேர்ட், பிரட் வென்ஸ்ட்ரப், கிறிஸ் ஸ்டுவேர்ட் ஆகியோரும், இதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளனர்.

அச்செயற்குழுவின் தலைவரும் ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளர்களுள் ஒருவருமான டேவிட் நியூனிஸ் மாத்திரமே, இவ்விடயத்தில் இன்னமும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, ஜனநாயகக் கட்சியினரும், இக்குறிப்புக்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, மல்லரின் விசாரணைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சி இதுவெனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .