2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ட்ரம்ப்பை விமர்சிக்கிறார் டிலெர்ஸன்

Editorial   / 2018 மே 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் பணியாற்றிய றெக்ஸ் டிலெர்ஸன், தற்போது ஜனாதிபதி ட்ரம்ப் மீது, பெயர் குறிப்பிடாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கல்வி நிறுவனமொன்றின் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய டிலெர்ஸன், ஐ.அமெரிக்க பொது வாழ்வில், நன்னெறிகள் தொடர்பாகவும் நேர்மை தொடர்பாகவும், அதிகரித்துவரும் நெருக்கடி நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, இராஜாங்கச் செயலாளராகப் பதவி வகித்திருந்த டிலெர்ஸன், இவ்வாண்டு மார்ச்சில், அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், ஐ.அமெரிக்க அரசியல் நிலைமை தொடர்பாக, பகிரங்க விமர்சனத்தை அவர் முன்வைத்த முதற்சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

“மக்களாகிய நாங்கள், சுதந்திரமான மக்கள், மிகவும் சிறிய விடயங்கள் என்று சொல்லப்படுகின்ற விடயங்கள் தொடர்பான உண்மைகளிலும் தடுமாற்றத்தை எதிர்கொள்வது, ஐ.அமெரிக்கா தொடர்பில் தடுமாறுவதற்குச் சமனாகும்.

“எங்களது சமூகத்திலும் பொது, தனியார் அமைப்புகளின் தலைவர்களிடத்திலும், நன்னெறிகள் தொடர்பாகவும் நேர்மை தொடர்பாகவும் காணப்படும் நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளாவிட்டால், நாங்கள் அனைவரும் அறிந்த ஐ.அமெரிக்க ஜனநாயகம், அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிடும்” என, அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், ஏனைய ஜனநாயக நாடுகளைப் போன்று, உண்மை தொடர்பிலான அர்ப்பணிப்பை, ஐ.அமெரிக்கா வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது உரையில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பெயரை அவர் குறிப்பிட்டு உரையாற்றியிருக்கவில்லை என்றாலும், அவர் மீதே விமர்சனத்தை முன்வைத்தார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, உண்மையற்ற விடயங்களை வெளிப்படுத்துகிறார் என, ஜனாதிபதி ட்ரம்ப் மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X