2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ட்ரம்ப்பைக் கண்டிக்கிறது பிரான்ஸ்

Editorial   / 2018 மே 07 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கான மரியாதையை வழங்குவதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறிவிட்டார் என, பிரான்ஸிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில், பிரான்ஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, தன்னுடைய எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.அமெரிக்க மாநிலமான டெக்ஸாஸில், துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான உரிமைக்காகப் போராடும் தேசிய றைபிள் சங்கத்தின் கூட்டமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், பிரான்ஸின் துப்பாக்கிச் சட்டங்கள் தொடர்பாகவும், இலண்டனில் இடம்பெறுவதாக அவர் கூறும் வன்முறைகள் தொடர்பாகவும் உரையாற்றினார்.

இதன்போது, பரிஸ் தாக்குதல்களின் போது, பிரஜைகளிடம் ஆயுதங்கள் இருந்திருந்தால், இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

“பரிஸில் எவரிடமும் துப்பாக்கிகள் இல்லை. 130க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமையையும், ஏராளமான மக்கள் காயமடைந்ததையும் நாங்கள் ஞாபகம் வைத்திருக்கிறோம். அவர்களைப் பற்றி யாரும் கதைப்பதில்லை. ஆயுதங்களை வைத்திருந்த சிறிய பயங்கரவாதக் குழுவொன்றால் அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், ஆயுததாரிகள், பொதுமக்களை எவ்வாறு கொன்றார் என, அவர் நடித்துக் காட்டினார்: “பூம். இங்கே வாருங்கள். பூம். இங்கே வாருங்கள், பூம்” என, சுடும் சத்தங்களை அவர் ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, தற்போது கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, “நவம்பர் 13, 2015இல், பரிஸில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளுக்கான உறுதியான விருப்பமின்மையை பிரான்ஸ் வெளிப்படுத்துவதோடு, கொல்லப்பட்டோரின் நினைவுகளை மதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்தது.

சமூக ஊடக வலையமைப்புகளிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் இக்கருத்துகளுக்குக் கடுமையான கண்டனம் வெளிப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .