2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன், தவறு நடந்துவிட்டது’

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடியமை தொடர்பாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க்  அமெரிக்க நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், ஸக்கர்பர்க்கிடம், 2016ஆம் ஆண்டு  நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ட்ம்பின் பிரசார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மேற்கொண்டது.

அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவற்றை ட்ரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த அப் மூலமாக ஐந்து கோடி பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு, 44 உறுப்பினர்கள்  கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்ட அவர், "பேஸ்புக் என்பது முற்போக்கு சிந்தனை கொண்ட, நேர்மறையான கொள்கைகள் கொண்ட நிறுவனமாகும். உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே பேஸ்புக் ஆகும். ஆனால், அதில் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை.

தேர்தலில் தலையீடு, போலியான செய்திகள் வெளியிடுதல் போன்ற தவறுகள் நடந்துவிட்டன. இது மிகப்பெரிய தவறாகும், இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதற்கு மன்னிப்பும் கோருகிறேன்.

இனிவரும் காலங்களில் பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், தவறான தகவல்களை பரப்புவதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மக்களை ஒன்றாக இணைப்பது மட்டுமல்லாமல், அவர்களை பொறுப்புணர்வுடன் செயற்பட வைக்கவும் முயற்சிக்கப்படும்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தவறான வழிகளில் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்த விபரங்கள் அனைத்தையும் அழிக்க கோரியுள்ளோம்.

போதிய அனுபவம் இல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தவறுகளை செய்திருக்கிறேன். தவறான நபர்களை நம்பினேன். தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை நம்பியிருந்திருக்கக் கூடாது. அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். இது முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, அலெக்ஸாண்டர் கோகன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே நடந்த நம்பிக்கை மீறலாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி;- tamil.thehindu.com


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .