2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாக்குதல் முயற்சிக்குப் பின்னர் சுதாகரித்தது நியூயோர்க்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், பயணிகள் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து, சிறியளவிலான பதற்றம் ஏற்பட்டிருந்தாலும், நிலைமைகள் சீராகியுள்ளன என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க் நேரப்படி நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் (இலங்கை நேரப்படி மாலை 5.30 மணியளவில்) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் முயற்சியால், தாக்குதலாளி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.

துறைமுக அதிகாரசபையின் பஸ் முனைக்குக் கீழேயுள்ள பகுதிக்கும் டைம்ஸ் சதுக்கத்துக்கும் இடையிலான பகுதியில், குழாய்க் குண்டொன்றை வெடிக்க வைப்பதற்கு, தாக்குதலாளி முயன்றார். எனினும், அவர் விரும்பிய நேரத்துக்கு முன்னரேயே, அக்குண்டு பாதியளவில் வெடித்துவிட, பெருமளவு அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.

தாக்குதலை நடத்தியவர், பங்களாதேஷைப் பிறப்பிடமாகக் கொண்ட, 27 வயதான அகெயெட் உல்லா என, பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்புக் காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான சந்தேகநபர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.

இந்தத் தாக்குதலை, பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என, உடனடியாகவே பொலிஸார் அறிவித்தனர். இத்தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர், அவரது குடும்பத்தினர் ஐ.அமெரிக்காவில் காணப்பட்ட காரணத்தால், ஐ.அமெரிக்காவில் வசிப்பதற்கான விசாவைப் பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவாலேயே இவர் உந்தப்பட்டார் என்பதோடு, யூடியூப் மூலமாகவே, குழாய்க் குண்டைச் செய்வதற்கு இவர் பழகிக் கொண்டார் எனவும், அதில் முழுமையாகத் தேர்ச்சியடையாமல் இக்குண்டை வெடிக்க வைப்பதற்கு அவர் முயன்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.அமெரிக்காவில், முன்னேற்றகரமான எண்ணங்களைக் கொண்டவர்கள் அதிகளவில் வாழும் பகுதியாகக் கருதப்படும் நியூயோர்க், இத்தாக்குதல் முயற்சி தொடர்பாக, ஆரம்பத்தில் சிறிய பதற்றத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பின்னர் சுதாகரித்துக் கொண்டு சென்றது. அங்கிருந்து தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள், பதற்றம் என்பதை விட, அங்கிருந்தவர்கள் அதிகளவில் எரிச்சலடைந்தே காணப்பட்டனர் என்று குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X