2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துருக்கியில் 18,000 அரச ஊழியர்கள் பதவி நீக்கப்பட்டனர்

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள றிசெப் தய்யீப் ஏர்டோவான், மீண்டும் பதவியேற்பதற்கு முன்பாக, தனது நாட்டைச் சேர்ந்த 18,000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார். அவரது இந்நடவடிக்கை, அவரது அடுத்த ஆட்சிக் காலத்திலும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஜனாதிபதி ஏர்டோவானின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இராணுவப் புரட்சி முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. அதை முறியடித்த அவர், அதன் பின்னர், அம்முயற்சியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், அரச ஊழியர்களைப் பதவி நீக்குவதும் கைதுசெய்வதும் என, கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி ஏர்டோவான், துருக்கி நேரப்படி நேற்று மாலை, பதவியேற்கவிருந்தார். அதற்கு முன்னதாக, இந்த அதிரடி நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.

பதவி நீக்கப்படும் அறிவிப்பின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 18,000 அரச பணியாளர்களில் அரைவாசிப் பேர், பொலிஸார் ஆவர். ஏனையோரில், இராணுவத்தைச் சேர்ந்த 5,000 பேர், பல்கலைக்கழங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்கள் 199 பேர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்மூலம், இராணுவப் புரட்சி முயற்சிக்குப் பின்னர், சுமார் 180,000 அரச பணியாளர்கள், இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என, மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

பணியாளர்களைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, மேற்கத்தேய நாடுகளும் அமைப்புகளும், கடுமையாகக் கண்டிக்கின்றன. ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இவ்விடயம் உள்ளது எனவும், எனவே, இவர்களைப் பதவியிலிருந்து நீக்குவது அவசியமானது எனவும், துருக்கி அரசாங்கம் குறிப்பிடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .