2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேவாலயத்தில் இரட்டைத் தாக்குதல்: 21 பேர் பலி; 71 பேர் காயமடைவு

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், தேவாலயத்தின் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 71 பேர் காயமடைந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். முஸ்லிம்கள் பிரதானமாக வாழும் இப்பிராந்தியத்தின் சுயாட்சிக்கான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்று, “ஆம்” என்பதற்குப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துச் சில நாள்களில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸின் சுலு தீவிலுள்ள ஜொலோ என்ற பகுதியிலுள்ள இந்தத் தேவாலயத்தில் முதலாவது வெடிப்பு, தேவாலயத்துக்குள், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது வெடிப்பு, கார்த் தரிப்பிடத்துக்கு வெளியே மேற்கொள்ளப்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல்களில் கொல்லப்பட்டோரில், பொதுமக்களே பிரதானமானவர்கள் என்ற நிலையில், 7 படையினரும் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல்களுக்கு, இதுவரை யாரும் உரிமை கோரியிருக்கவில்லை.

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்ஸில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பிராந்தியத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த சர்வஜன வாக்கெடுப்பில், சுயாட்சிக்கு ஆதரவாக, 85 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு முதல், அப்பகுதியில் சுயாட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், சுயாட்சியை நிராகரித்த ஒரு சில பகுதிகளில், சுலுவும் உள்ளடங்குகிறது. என்றாலும், சுயாட்சிக்குள் அப்பகுதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃபின் லொரென்ஸனா, குறித்த தாக்குதல்களைக் கண்டித்ததோடு, “பயங்கரவாதத்துக்கு எந்த வெற்றியும் கிடைக்காமல் தடுப்பதற்கு”, உள்ளூர் மக்கள் இணைந்து செயற்பட வேண்டுமெனக் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X