2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நடவடிக்கைகளை மாற்றும்வரை வடகொரியாவுடன் பேச்சில்லை’

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா, தனது நடவடிக்கைகளில் முன்னேற்றும்வரை, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன் தெரிவித்த கருத்துக்கு மாற்றான, முற்றிலும் எதிரான கருத்தாக, இக்கருத்து அமைந்துள்ளது.

வடகொரியாவுடன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைகளுக்கத் தயாராக இருப்பதாக, டிலெர்ஸன், முன்னர் தெரிவித்திருந்தார். இது, இவ்விடயத்தில் முக்கியமான மாற்றமாகக் கருதப்பட்டது.

எனினும், இக்கருத்தைத் தொடர்ந்து, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை அதிகாரியொருவர், “வடகொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனையைக் கருத்திற்கொள்ளும் போது, பேச்சுவார்த்தைக்கான நேரம் இதுவல்ல” என்று குறிப்பிட்டார்.

றெக்ஸ் டிலெர்ஸன் வெளிப்படுத்திய குறித்த நிலைப்பாட்டு மாற்றத்துக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அனுமதி கிடைக்கப்பெற்றதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவ்வதிகாரி பதிலளிக்கவில்லை.

மாறாக, “வடகொரிய அரசாங்கம், தனது நடவடிக்கைகளைக் குறிப்பிட்டளவு உயர்த்தும்வரை, வடகொரியாவுடனான பேரம்பேசல்கள் காத்திருக்க வேண்டும் என்பதில், ஐ.அமெரிக்க நிர்வாகம் உறுதியுடன் உள்ளது. இராஜாங்கச் செயலாளர் கூறியதைப் போன்று, மேலதிகமாக ஏவுகணை, அணுவாயுதச் சோதனைகளை வடகொரியா நிறுத்துவது, நடவடிக்கை முன்னேற்றம் என்பதற்குள் உள்ளடங்குகிறது” எனத் தெரிவித்தார்.

ஆனால், றெக்ஸ் டிலெர்ஸனின் கருத்தில், “ஏவுகணை, அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்வரை, பேச்சுவார்த்தை இடம்பெறாது” என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மாறாக, பேச்சுவார்த்தைகளின் நடுவில், இன்னொரு சோதனையை வடகொரியா நடத்துவது, பேசுவதற்குக் கடினமான நிலைமையை ஏற்படுத்தும் என்றே கூறியிருந்தார்.

ஏற்கெனவே ஒரு தடவையும், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை டிலெர்ஸன் வெளிப்படுத்தி, “நேரத்தை வீணாக்கும் செயற்பாடு” என, பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ட்ரம்ப் வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .