2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தார் மே

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, தனதரசாங்கம் மீதான இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடித்தார்.

மேயின் அரசாங்கத்தில் நம்பிக்கையிருப்பதாக 325 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், எதிராக 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த வாக்கெடுப்புக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மேயின் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுதல்) ஒப்பந்தமானது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் அல்லது தாமதமாக விலகும் நிலையை பிரித்தானியா எதிர்கொண்டுள்ளது. இதுதவிர, பிரெக்சிற் மீது இன்னொரு பொதுவாக்கெடுப்பு இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில், மேற்குறித்த வாக்கெடுப்பின் பின்னர் தனது வசிப்பிடத்துக்கு வெளியேயிருந்து உரையாற்றிய மே, முன்னநகர்வதற்கான வழியொன்றைக் கண்டுபிடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதாகக் கூறினார்.

அந்தவகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பிற்பாடு சில கட்சித்தலைவர்களை மே சந்தித்திருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவரான ஜெரெமி கோர்பைன் ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தெரிவை நிராகரிக்கும் வரையில் பேச்சுவார்த்தை நடத்த மறுத்திருந்தார்.

ஜெரெமி கோர்பைன் தலைவராகவுள்ள தொழிலாளர் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நிரந்த சுதந்திர வர்த்தகமொன்றையும் நெருக்கமான உறவொன்றையும் பணியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் மேம்பட்ட பாதுகாப்பையும் வேண்டுகிறது.

எவ்வாறாயினும் மேயின் பழமைவாதக் கட்சியின் கடும்போக்குவாத பிரெக்சிற் ஆதரவாளர்களும் அவரது சிறுபான்மை அரசாங்கத்தை பெரும்பான்மையாக்கும் வட அயர்லாந்துக் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணும் ஒப்பந்தமொன்றை ஆதரிக்கவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் விலகும் தெரிவை மே நிராகரிக்கவில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .