2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடுதிரும்ப 374 றோகிஞ்சாக்கள் மாத்திரம் இனங்காணப்பட்டனர்

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குச் சென்றுள்ள றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுள் வெறுமனே 374 பேரை மாத்திரமே, மீளக்குடியமர்த்துவதற்காக அடையாளங் கண்டுள்ளதாக, மியான்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலைமைக்கு, பங்களாதேஷ் அரசாங்கத்தை, மியான்மார் அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, சுமார் 700,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், அங்கிருந்து பங்களாதேஷுக்குச் சென்றனர். பங்களாதேஷில் தங்கியுள்ளவர்களை, மீண்டும் மியான்மாருக்கு அனுப்புவதற்கான இணக்கப்பாடு, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையிலேயே, மீள்குடியேற்றத்துக்காக, 8,032 பேரின் ஆவணங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டன எனவும், அவற்றில் 374 பேரின் ஆவணங்களையே இதுவரை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்த, மியான்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் மையின்ட் து,

இந்த 374 பேரும், முதற்தொகுதியாக, மியான்மாருக்கு அழைத்து வரப்படுவர் எனவும் தெரிவித்தார்.

அந்த 374 பேரும், அவர்கள் விரும்பும் நேரத்திலேயே மியான்மாருக்கு அழைத்து வரப்படுவர் என, இதன்போது அவர் தெரிவித்தார். இவர்கள், நாடு திரும்புவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனரா என்பது தெரியவரவில்லை.

ஏனைய அகதிகளில் சிலர், மியான்மாரில் வசித்தனரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், இன்னும் சிலரின் ஆவணங்களில் கைவிரல் அடையாளங்களும் தனிப்பட்ட புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதேபோல், பங்களாதேஷால் வழங்கப்பட்ட பட்டியலில், மூன்று “பயங்கரவாதிகளும்” உள்ளடங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டார். ஆனால், எந்த வகையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என வகைப்படுத்தினர் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

மறுபக்கமாக, றோகிஞ்சா அகதிகளை நாட்டுக்குள் மீண்டும் சேர்ப்பதற்கான உண்மையான விருப்பம், மியான்மாருக்கு இல்லை என, பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .