2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நான் இனவாதி அல்லன்’

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது, இனவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலையில், தான் இனவாதி அல்லன் என, அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆபிரிக்க நாடுகளையும் ஹெய்ட்டியையும் எல் சல்வடோரையும், “மலக்குழிகள்” அல்லது “மலத்துவாரங்கள்” என, குடியேற்றச் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்தார் என்ற தகவல் வெளியாகியது. அவர் குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும், கறுப்பினத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில், இனவாத அடிப்படையிலேயே இக்கருத்தை அவர் வெளியிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், புளோரிடாவில் உள்ள ட்ரம்ப் சர்வதேச கோல்க் கழகத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, “நான், இனவாதி அல்லன். உங்களால் நேர்காணப்படக் கூடிய, குறைந்த இனவாதமுடைய நபர் நான் தான் என்பதை நான் சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக, ஏற்கெனவே தனது மறுப்பை வெளியிட்டிருந்தாலும், நேரடியான மறுப்பை, அவர் இன்னமும் வெளியிட்டிருக்கவில்லை.

இதேவேளை, வடகொரியா தொடர்பிலும் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

பழைமைவாதக் கொள்கைகளுக்குச் சார்பான ஊடகமான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், “வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுடன் சிறந்த உறவைக் கொண்டிருக்கிறேன்” என, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தாரென அறிக்கையிடப் படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகையோ, “...சிறந்த உறவைக் கொண்டிருப்பேன்” என்று தான் கூறினார் என்கிறது. இரண்டு தரப்புகளும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ள போதிலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், “...சிறந்த உறவைக் கொண்டிருப்பேன்” என்று கூறியதாகவே, ஜனாதிபதி ட்ரம்ப், இதன்போது குறிப்பிட்டார்.

அத்தோடு, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்துவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .