2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதற்கட்டம்’

Editorial   / 2018 ஜனவரி 11 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா, வடகொரிய அணுவாயுத நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதற்கட்டம் என, அப்பேச்சுவார்த்தைகளை வர்ணித்தது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான பேச்சுவார்த்தைகள், ஐ.அமெரிக்காவின் மத்தியஸ்தத்தோடு அல்லது அதன் பங்களிப்போடு இடம்பெறுவதே வழக்கமானது என்ற போதிலும், இச்சந்திப்பில் ஐ.அமெரிக்கா பங்குபற்றியிருக்கவில்லை. 

பேச்சுவார்த்தைகளுக்காக வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் விடுத்த அழைப்பின் போது, ஐ.அமெரிக்காவை விடுத்து, வடகொரியாவும் தென்கொரியாவும் நேரடியாகப் பேச வேண்டுமென்றே கோரியிருந்தார். 

இந்நிலையிலேயே, பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்களுள் ஒருவரான ஸ்டீவ் கோல்ட்ஸ்டெய்ன், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். 

முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றியே அதிகமான கவனத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள், அணுவாயுத அழிப்புத் தொடர்பாகக் காணப்பட வேண்டும் என, இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டது. 

ஆனால், இது எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது, கேள்விக்குரியதாகவே உள்ளது. இப்பேச்சுவார்த்தையில், ஒலிம்பிக் தவிர்ந்த ஏனைய விடயங்களும் பேசப்பட்ட போதிலும், அணுவாயுத ஒழிப்புத் தொடர்பான பேச்சுகளுக்கு தென்கொரியா முன்மொழிந்த போது, அதற்கான கடுமையான எதிர்ப்பை, வடகொரியா வெளிப்படுத்தியது என்று, பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணுக்குண்டுகள் உட்பட தமது அனைத்து ஆயுதங்களும் குண்டுகளும், ஐ.அமெரிக்காவால் தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கவே தவிர, தென்கொரியா அல்லது சீனா அல்லது ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அன்று என, வடகொரியா குறிப்பிடுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .