2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பக்தாத் தாக்குதல்களில் 35 பேர் பலி

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில், குறைந்தது 35 பேர் பலியானதோடு, 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அறிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்கள் கொண்ட காலப்பகுதியில் நடத்தப்பட்ட, இவ்வாறான இரண்டாவது தாக்குதல்கள் இவையாகும்.

தற்கொலை அங்கிகளை அணிந்த இரண்டு தாக்குதலாளிகள், தங்களைத் தாங்களே வெடிக்க வைத்து, இத்தாக்குதலை மேற்கொண்டனர் என, உள்துறை அமைச்சுத் தெரிவித்தது.

தயரான் சதுக்கம் என்ற பகுதியிலேயே, இவ்விரண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

தயரான் சதுக்கம் என்பது, மிகவும் சனநெருக்கடி அதிகமான பகுதியாகும். வர்த்தக மையமாகக் காணப்படும் இப்பகுதியில், தினசரி கூலியாட்கள், அங்கு ஒன்றுசேர்வது வழக்கமாகும்.

இப்பகுதியில் இராணுவ, பொலிஸ் பிரிவுகள் பெருமளவு காணப்பட்டிருக்காத நிலையில், பொதுமக்களே இலக்குவைக்கப்பட்டனர் என்று கருதப்படுகிறது. அத்தோடு, தாக்குதலை யார் நடத்தினார்கள் என இதுவரை உரிமை கோரப்படாத போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவே இத்தாக்குதலை நடத்தியது எனக் கருதப்படுகிறது.

ஈராக்கின் மூன்றிலொரு பகுதியை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு 2014ஆம் ஆண்டில் கைப்பற்றிய பின்னர், பக்தாத்தில் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று வந்தன. ஆனால், கடந்தாண்டு டிசெம்பரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அங்கு உத்தியோகபூர்வமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தாக்குதல்கள் குறைவடைந்திருந்தன.

ஆனால், அண்மைய நாட்களில் இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. கடந்த சனிக்கிழமை, பக்தாத்தின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .