2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படகு விபத்துகளால் 170 குடியேற்றவாசிகள் பலியாகினர்

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியதரைக் கடலில், குடியேற்றவாசிகள் சென்ற படகுகள் விபத்துக்குள்ளான இருவேறு சந்தர்ப்பங்களில், சுமார் 170 குடியேற்றவாசிகள் பலியாகினர் என அஞ்சப்படுகிறது. லிபியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலிருந்தே, டிங்கி வகையிலான இப்படகுகள் புறப்பட்டிருந்தன.  

அவற்றில் ஒரு படகு, கடந்த வெள்ளிக்கிழமையன்று மூழ்கிக் கொண்டிருப்பதை, இத்தாலியின் இராணுவ விமானமொன்று கண்டுள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக, பாதுகாப்புப் படகுகள் இரண்டை அவ்விமானம் நீரில் வீசிய போதிலும், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால், அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது என, இத்தாலிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.  

இதைத் தொடர்ந்து, கடற்படையின் ஹெலிகொப்டரொன்று அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டது எனவும், குறைவெப்பநிலையால் தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

உயிர்தப்பிய இம்மூவரின் கருத்துகளின் அடிப்படையில், இவர்கள் சென்ற படகு, வியாழக்கிழமை இரவு, லிபியாவிலிருந்து 120 பேருடன் புறப்பட்டுள்ளது. இவர்களில் அநேகர், மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர். புறப்பட்ட படகு, 10 தொடக்கம் 11 மணித்தியாலங்கள் கடலில் காணப்பட்ட பின்னர், படகு மூழ்கத் தொடங்கியது எனவும், அதில் சென்றோர் மூழ்கினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. படகில் சென்றோரில் 10 பேர் பெண்கள் எனவும், இரண்டு மாதக் குழந்தை உட்பட 2 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த இத்தாலியப் படையினர், சம்பவம் தொடர்பாக லிபியக் கடற்படையினருக்கு அறிவித்ததாகவும், அப்பகுதியால் சென்ற வர்த்தகக் கப்பலொன்றை விபத்து இடம்பெற்ற இடத்துக்கு லிபியக் கடற்படையினர் திருப்பிய போதிலும், தேடுதல்கள் பயனளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.  

இதேவேளை, மொரோக்கோவிலிருந்து புறப்பட்ட படகொன்றும் விபத்தைச் சந்தித்துள்ளது. மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள அல்பொரொன் கடலில், மோதல் விபத்தொன்று ஏற்பட்டது என, ஸ்பெய்னைச் சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்தது. இப்படகில் பயணித்த 53 பேருக்கும் என்னவானது என்பது தெரியாத நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர் என்றே கருதப்படுகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .