2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பண மதிப்பு நீக்க யோசனையே கபடமானது’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய அரசாங்கத்தின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியமைக்கு, நடிகர் கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.  

“மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ற பாகுபாடில்லாமல், இந்தியாவின் அற்புதப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் போதெல்லாம், என் குரல் எழும் என்பதே உண்மை. ஆனால், என்பால் பி​ழை இருப்பின், பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் நான் தயங்கியதில்லை” என்று, அவர் தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இந்நடவடிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது, தான் அவசரப்பட்டுவிட்டதாகவும் அதற்காக இப்போது மன்னிப்புக் கேட்பதாகவும் கூறியுள்ளார். 

இதுகுறித்து கமல் மேலும் கூறியுள்ளதாவது,  

“பணமதிப்பு நீக்கம் பற்றி, மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து, இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று, டுவிட்டர் பக்கத்தில் எனது கருத்தைப் பதிவு செய்தேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில், முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும், மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே, நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் அழைத்து, என் ஆதரவுக்கு எதிராக, தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். 

“சிறிதுநாள் கழித்து, பண மதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று, மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கு பின்னர், பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன். 

“தற்போது, ‘யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு, அரசாங்கத்திடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது, சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு கூறியதில், சற்றே அவசரப்பட்டு விட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்’ என்று, அடம்பிடிக்காமல், தவறை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு, என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக, அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்” என்று அவர் கூறியுள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .