2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதவி விலகினார் ஐ.இராச்சிய உள்துறைச் செயலாளர்

Editorial   / 2018 மே 01 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் உள்துறைச் செயலாளர் அம்பர் றட், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கரீபியனைச் சேர்ந்த குடியேற்றவாசிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தவறான தகவலை வழங்கியமைக்குப் பொறுப்பேற்றே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வின்ட்ரஷ் தலைமுறை என அழைக்கப்படும் பிரிவினரில், 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்தோரில், ஐ.இராச்சியத்தில் இருப்பதற்கான உரித்தைக் கொண்டவர்களென நிரூபிக்காத அனைவரும், ஐ.இராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவர் என, ஐ.இராச்சிய அரசாங்கத்தின் முடிவு காணப்படுகிறது என, அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக ஐ.இராச்சியத்தில் காணப்பட்ட இவர்களை, உத்தியோகபூர்வமான ஆவணங்கள் இல்லை என்பதற்காக வெளியேற்றுவதென்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என, தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்த நிலையில், எத்தனை பேரை வெளியேற்ற வேண்டும் என்றவாறான இலக்கையும், ஐ.இராச்சியம் கொண்டிருக்கிறது என வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளித்திருந்த உள்துறைச் செயலாளர் அம்பர் றட், அப்படியான இலக்குகள் எவையும் இல்லை என மறுத்திருந்தார். ஆனால், அதன் பின்னர் வெளியான ஆவணங்களின் போது, வின்ட்ரஷ் தலைமுறையைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான இலக்கை, அரசாங்கம் கொண்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, அவ்விடயத்துக்குப் பொறுப்பேற்று, உள்துறைச் செயலாளர் பதவி விலகியுள்ளார். “இதுபற்றி நான் அறிந்திருக்க வேண்டும். அதுபற்றி நான் அறிந்திருக்கவில்லை என்பதற்கு, நான் முழுப் பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டார். இது தொடர்பில் பதவி விலகல் கடிதத்தை, பிரதமர் தெரேசா மேயிடம் கையளித்த அம்பர் றட், உள்விவகாரத் தெரிவுக் குழுவை, இது தொடர்பில் தவறான வழிநடத்தியதாகவும், அதை வேண்டுமென்றே செய்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இவ்வெளியேற்றம், பிரதமர் மே-க்குக் கிடைத்த முக்கியமான பின்னடைவாகக் காணப்படுகிறது. ஏனெனில், அம்பர் றட் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த போது, கடந்த வெள்ளிக்கிழமை கூட, “அம்பர் றட் மீது முழு நம்பிக்கையுள்ளது” என, பிரதமர் கூறியிருந்தார்.

இச்சர்ச்சை காரணமாக, கரீபியன் நாடுகளுக்கும் ஐ.இராச்சியத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படலாம் எனக் கருதப்பட்டதோடு, பிரதமர் மீது தனிப்பட்ட ரீதியிலும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன. ஏனெனில், உள்துறைச் செயலாளராக தெரேசா மே இருந்தபோது உருவாக்கப்பட்ட சட்டத்தின் காரணமாக, கரீபியன் குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட வேண்டியேற்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .