2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதவி விலகுவதாக உறுதியளித்துத் தப்பித்தார் தெரேசா மே

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமைக்கான போட்டியை, 200-113 எனத் தோற்கடித்தார்​
அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவதாக உறுதி

பிரெக்சிற் ஒப்பந்தத்தைக் காப்பாற்ற, இன்னும் போராட்டம்

ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, அவரது கட்சிக்குள் அவரது தலைமைத்துவத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை, வெற்றிகரமாகத் தோற்கடித்தார். இதன் மூலமாக, அவரது பிரதமர் பதவியை அவர் காப்பாற்றிக் கொண்டார். இதன் காரணமாக, அவருக்குக் காணப்பட்ட உடனடியான ஆபத்தை அவர் தவிர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான ஒப்பந்தத்துக்கு, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெறுவதற்கான விவாதம் இடம்பெற்று வந்ததோடு, அதற்கான வாக்கெடுப்பில் தோல்வியடைவது உறுதியெனத் தெரிந்த நிலையில், வாக்கெடுப்பை, பிரதமர் மே ஒத்திவைத்திருந்தார்.

இதையடுத்து, அவரது கட்சியான பழைமைவாதக் கட்சிக்குள், அவரது தலைமைத்துவத்துக்கான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு, இலங்கை நேரப்படி நேற்று (13) அதிகாலை இடம்பெற்றது. இதன்போது, எதிர்ப்பாளர்களைச் சமாளித்திருந்த பிரதமர் மே, 200-113 என்ற வாக்குகள் கணக்கில் தப்பித்தார்.

எனினும் அவர், இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக, மிகப்பெரிய விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதன்படி, பிரெக்சிற் ஏற்பாடுகள் முடிவடைந்ததும், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் வாக்குறுதி வழங்கினார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகுவதோடு, அடுத்த தேர்தலில் கட்சியின் தலைவராகச் செயற்பட மாட்டார் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது.

அவரது இந்த விட்டுக்கொடுப்பு, மிகப்பெரியதாகக் கருதப்படுகின்ற நிலையில், அதற்கு மத்தியிலும் 113 உறுப்பினர்களின் எதிர்ப்பு அவருக்குக் காணப்பட்டமை, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்புக்குப் பின்னர், பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே உரையாற்றிய பிரதமர் மே, இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டார்.

“கணிசமானளவு சக பணியாளர்கள் (உறுப்பினர்கள்), எனக்கெதிராக வாக்களித்தனர். அவர்கள் என்ன கூறினர் என்பதைக் கேட்டேன். இப்போது நாங்கள், பிரித்தானிய மக்களுக்கு, பிரெக்சிற்றை வழங்குவதற்காக நாங்கள் பணியாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

சவால் நீடிக்கிறது

கட்சிக்குள் காணப்பட்ட சவாலை, பிரதமர் மே சமாளித்திருந்தாலும் கூட, பிரெக்சிற்றை நிறைவேற்றும் விடயத்தில், பாரிய சவாலை அவர் எதிர்கொள்கிறார்.

பிரெக்சிற் ஒப்பந்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயலப் போவதாகத் தெரிவித்து, பிரதமர் மே, ப்ரஸல்ஸுக்கு நேற்று (13) சென்ற போதிலும், ஏற்கெனவே அங்கிகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், ஏற்கெனவே உறுதியாகத் தெரிவித்துள்ளனர். எனவே, உறுதியளித்ததன் படி, பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

அதேபோல், நாடாளுமன்றத்தில் அவருக்கு, மிகச்சிறிய பெரும்பான்மையே உள்ள நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த 113 பேர், அவருக்கெதிராகக் கட்சிக்குள் வாக்களித்துள்ளதால், அவர்களில் ஒரு சிலர், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தாலே, பிரதமரின் திட்டம் தோல்வியடையும்.

எனவே, பிரதமர் பதவியை, தற்காலிகமாக அவர் காப்பாற்றினாலும், அவரது பிரெக்சிற் திட்டம் தோல்வியடையும் ஆபத்தை எதிர்நோக்குவதால், அவரது பதவி, நீண்டகாலத்துக்குக் காப்பாற்றப்பட முடியுமா என்பது சந்தேகமே எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .