2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கொஹனால் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க பணம் வழங்கப்பட்டமை பிரசார நிதி மீறல்களென நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக்கல், சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம் என ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரோல்ட் நட்லர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், கொண்டிருந்த உறவுகள் தொடர்பாக வெளிப்படுத்தாமலிருக்க பிரசாரத்தின்போது இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட ட்ரம்ப்புக்கு பிரச்சினை கொடுக்கும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையியிலேயே, பணம் வழங்கப்பட்டது பிரசார நிதி மீறலென நிரூபிக்கப்பட்டால், அவை ஜனாதிபதி ட்ரம்பை பதவி விலக்கக்கூடிய குற்றங்களென, அடுத்த மாதம் ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கட்டுப்படுத்தும்போது நீதி ஆணைகுழுவின் தலைவராக இருக்கப் போகும் ஜெரோல்ட் நட்லர் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக வெள்ளை மாளிகை உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லையென்றபோதும் மீண்டும் மீண்டும் மைக்கல் கொஹன் பொய் கூறுவதாகவும் ஆகையால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது முக்கியமானதல்ல என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் சார்பில் நடிகைகளான ஸ்றோமி டேனியல்ஸுக்கும் கரென் மக்டூகலுக்கும் பணம் செலுத்தியமை, வரிகளிலிருந்து தப்பித்தமை, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் அமைய முன்மொழியப்பட்டிருந்த ட்ரம்ப் நிறுவனத்தின் கட்டடம் தொடர்பில் பொய் கூறியமை தொடர்பாக மைக்கல் கொஹனுக்கு சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுக்க அரச வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க சட்டத்தின்படி, தேர்தலில் தாக்கம் செலுத்தக் கூடிய பிரசார பங்களிப்புகள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன், நபரொருவருக்கு 2,700 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலுத்தப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், குறித்த இரண்டு பெண்களுக்கும் ஆறு இலக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .