2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவாரா ஜனாதிபதி?

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீனைப் பதவியிலிருந்து தூக்கி வீசுவதற்கான முயற்சியை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மேற்கொண்டுவரும் நிலையில், அதை அனுமதிக்கப் போவதில்லை என, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யுமாறு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த, அரசாங்கம் மறுத்து வருகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் மொஹமட் அனில், ஜனாதிபதியைப் பதவியிலிருந்து விலக்குவதற்கான முயற்சிகளில், உச்சநீதிமன்றம் ஈடுபடுகிறது என்ற தகவல், அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது எனவும், அவ்வாறான உத்தரவை அமுல்படுத்த வேண்டாம் என, பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்படுமாயின், நாட்டில் தேசிய பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் என, அவர் எச்சரித்தார்.

இதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துவரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹுஸைன் றஷீட், தனது பதவியிலிருந்து நேற்று விலகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் உட்பட 9 பேரின் சிறைத்தண்டனைகளை நீக்கியே, அவர்களை விடுவிக்கும் உத்தரவை, உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

2013ஆம் ஆண்டு முதல், நாட்டின் ஜனாதிபதியாக உள்ள அப்துல்லா யமீன், இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்.

இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் இணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு, சட்டமா அதிபரின் கருத்தை விமர்சித்ததோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவை, ஜனாதிபதி யமீன் விடுப்பார் என அஞ்சுவதாகவும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .