2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனிப்புயலில் சிக்கி 14 சிரியர்கள் பலியாகினர்

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலிருந்து லெபனானுக்குச் செல்ல முயன்ற அகதிகளில் 14 பேர், பனிப்புயலில் சிக்கிப் பலியாகியுள்ளனர் என, ஐக்கிய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் உள்ளடங்கலாக சிரியர்கள் தொகுதியொன்று, சிரிய - லெபனான் எல்லையூடாகச் செல்ல முயன்றுள்ளது. வியாழக்கிழமையே, இவர்கள் இவ்வாறு செல்ல முயன்றுள்ளனர்.

ஆட்களைக் கடத்தும் பாதையொன்றினூடாக, இவர்கள் பயணித்தனர் என்று கூறப்படுகிறது.

ஆனால், திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக, அவர்கள் அதில் சிக்குண்டு, மரணத்தைத் தழுவினர்.

லெபனான் இராணுவத்தாலும் அந்நாட்டு சிவில் பாதுகாப்புப் பிரிவாலும், கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்ட கருத்தின்படி, 2 சிறுவர்கள், 6 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், அதன் பின்னர் அவ்வெண்ணிக்கையை உயர்த்திய ஐக்கிய நாடுகள், 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

அந்தக் குழுவில், கர்ப்பந்தரித்த பெண்ணொருவர் உட்பட இன்னும் சிலர், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர் என, ஐ.நாவின் அறிக்கை தெரிவித்தது.

ஐ.நாவின் இவ்வறிக்கையைத் தொடர்ந்து, மேலதிகமான அறிக்கையொன்றை வெளியிட்ட லெபனான் இராணுவம், மேலுமொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்தது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து, இவர்கள் தப்புவதற்கு முயன்றபோது, ஆட்கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டது எனவும், அவர்கள் இடைநடுவில் இவர்களைக் கைவிட்டுவிட்டுச் சென்றனர் எனவும், சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .