2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரிஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள ஆர்க் டி ட்ரிம்பே பகுதியில், நேற்று முன்தினம் (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோர் மீது, கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றை மேற்கொண்ட பொலிஸார், அவர்களைத் துரத்தியடித்தனர். அதன்மூலமாக, பரிஸிலும் பிரான்ஸின் ஏனைய பகுதிகளிலும் தொடரும் போராட்டங்களுக்கு முடிவில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டங்கள், 9ஆவது வாரயிறுதியாக, கடந்த வாரயிறுதியும் தொடர்ந்திருந்தன. 

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வடக்குப் பரிஸில் தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில், அணிவகுத்துச் சென்றிருந்தனர். அதிக சத்தத்தை எழுப்பியவண்ணம் அவர்கள் சென்றிருந்தாலும், அமைதிக் குலைவு ஏற்பட்டிருக்கவில்லை. 

ஆனால், அவர்களில் சிறிய குழுவொன்று, அவர்களிலிருந்து பிரிந்துசென்று, பொலிஸார் மீது போத்தல்களையும் ஏனைய பொருட்களையும் வீசியெறிந்தனர். பொலிஸார் மீது கற்களையும் வர்ணப் பூச்சுகளையும் கொண்டு அவர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன என, சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர். 

அதன் பின்னர், போராட்டக்காரர்களில் சிலர், அண்மைய சில வாரங்களாக அமைதியின்மை ஏற்பட்ட சம்ப்ஸ் எலைஸீஸ் பகுதியில் ஒன்றுகூடி, தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அவர்களில் பலர், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 

உள்நாட்டு அமைச்சின் தரவுகளின்படி, சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டங்களில், நாடு முழுவதிலும் அதிகபட்சமாக 84,000 பேர் கலந்துகொண்டனர். இவ்வெண்ணிக்கை, கடந்த வாரம் ஒன்றுகூடிய சுமார் 20,000 பேரோடு ஒப்பிடும் போது, மிக அதிகமாகும். எனினும், இப்போராட்டங்களின் முதல் நாளில் ஒன்றுகூடிய, 282,000 பேரோடு ஒப்பிடும் போது, இவ்வெண்ணிக்கை சிறிதாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .