2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரிஸ் தாக்குதலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில், உயிருடன் காணப்பட்ட ஒரேயொரு நபரான சாலா அப்டெஸ்லாமுக்கு, பெல்ஜிய நீதிமன்றமொன்று, 20 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பெல்ஜியத்தில் வைத்து 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட முன்னர், பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காகவே, இத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாலாவும் அவரோடு இணைந்த ஆயுததாரியான சோஃபியான் அயாரியும், தீவிரவாதத்தில் ஈடுபட்டனர் என்பதில் சந்தேகங்கள் இல்லையென, இது தொடர்பான தீர்ப்பின் போது, நீதிமன்றம் குறிப்பிட்டது.

இருவர் தொடர்பான வழக்குகளின் போதும், இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென, வழக்குத் தொடுநர்கள் கோரியிருந்தனர்.

இதில், 2015ஆம் ஆண்டில், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, வழக்கு விசாரணைகளுக்காக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சாலாவோ அல்லது அயாரியோ, தீர்ப்பு வழங்கப்படும் போது, நீதிமன்றத்தில் காணப்பட்டிருக்கவில்லை.

பரிஸ் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்படும் சாலா தொடர்பாகக் கிடைத்த தகவலையடுத்து, பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்று, பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சாலாவும் அயாரியும், நான்கு பொலிஸாருக்குக் காயங்களை ஏற்படுத்தியிருந்தனர். இதன் பின்னரே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வழக்குத் தொடர்பான முதலாவது அமர்வில், சாலா கலந்துகொண்ட போதிலும், முஸ்லிம்களுக்கு எதிரானதாக நீதிமன்றம் காணப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியதோடு, ஏனைய அமர்வுகளில் கலந்துகொள்ள மறுத்திருந்தார். அத்தோடு, தனது நம்பிக்கை முழுவதையும், அல்லாவின் மீது மாத்திரமே கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பின் போது, தனது தாய்க்கு, சாலா, “அல்லா என்னை வழிநடத்தினார். இவருக்கான பாதையைத் திறப்பதற்காக, அவரது சேவகர்களுள் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தார். இதனால் தான், என்னுடைய பலம் அனைத்தையும் பயன்படுத்தி, அல்லாவின் எதிரிகளுக்கெதிராகப் போராட வேண்டியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டது. அத்தோடு, சாலாவின் சகோதரரான பிராஹிம், பரிஸ் தாக்குதல்களின் போது, தன்னைத் தானே வெடிக்க வைத்திருந்த நிலையில், “அவர், தற்கொலை செய்திருக்கவில்லை. அவர், இஸ்லாத்தின் நாயகன்” என, சாலா குறிப்பிட்டார் என, நீதிபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .