2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கிகரிக்குக’

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் தலைநகராக, ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவைக் கண்டித்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், அதற்குப் பதிலாக, பலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கிகரிக்குமாறு, சர்வதேச நாடுகளிடம் கோரியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில், துருக்கிய\ ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவானால் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற மாநாட்டில், இஸ்‌ரேல் - பலஸ்தீன விடயம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அழைப்பின் இந்த மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய ஜனாதிபதி ஏர்டோவான், “பக்கச்சார்புள்ள நாடான ஐக்கிய அமெரிக்கா, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதென்பது, தற்போது வாய்ப்பே இல்லாது போயுள்ளது. மத்தியஸ்தராக யார் இருப்பார்கள் என்ற விடயத்தை, நாங்கள் இப்போது கலந்துரையாட வேண்டும். இது, ஐக்கிய நாடுகளிலும் கலந்துரையாடப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இம்மாநாடு தொடர்பாக, அறிக்கையொன்றை வெளியிட்ட துருக்கி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இம்மாநாட்டில் ஒன்றுகூடிய பேரசர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோர், ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஜெருசலேம் அறிவிப்பு என்பது, சமாதானத்துக்கான அனுசரணையாளர் என்பதிலிருந்து வாபஸ் பெறுவதற்கான ஓர் அறிவிப்பு எனக் கூறினர் எனத் தெரிவித்தது.

இந்த முடிவென்பது, அனைத்து சமாதான முயற்சிகளினதும் பலத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அவர்கள் தெரிவித்தனர் என்றும், பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஊக்குவிப்பை வழங்குவதாகவும், சர்வதேச சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானதாகவும் உள்ளது எனவும், அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது.

இதன்போதே, பலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை, சர்வதேச நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .