2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’பா.ஜ.க வென்றால் இந்து பாகிஸ்தான் உருவாகும்’

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறுமாயின், “இந்து பாகிஸ்தான்” ஒன்று உருவாகுவதற்கான நிலைமைகளை அக்கட்சி ஏற்படுத்துமென, காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஷஷி தரூர் எச்சரித்துள்ளார். அவரது இக்கருத்து, பா.ஜ.கவிடமிருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், மிகச்சிறப்பான வெற்றியை பா.ஜ.க பெற்றுக்கொண்டதோடு, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள தேர்தலிலும் வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு, காங்கிரஸ் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து, முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பா.ஜ.க, இந்துத்துவாவை முன்னிறுத்துகிறது என்ற குற்றச்சாட்டு, மதசார்பற்ற கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (11) கருத்துத் தெரிவித்த தரூர், அடுத்தாண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால், இந்தியாவின் அரசமைப்பு, தற்போதிருக்கும் நிலையில் தப்பிக்காது எனக் குறிப்பிட்ட அவர், “இந்தியாவின் அரசமைப்பைக் கிழித்தெறிந்துவிட்டு, புதியதொன்றை உருவாக்குவர்” எனக் குறிப்பிட்டார்.

பா.ஜ.கவால் அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு, இந்து ஆட்சியைக் கொண்டிருக்கும் எனவும், சிறுபான்மைப் பிரிவினருக்கான சமவுரிமையை அது நீக்குமெனவும் குறிப்பிட்ட அவர், “அது, இந்து பாகிஸ்தானை உருவாக்கும். மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், மௌலானா அசாட், சுதந்திரப் போராட்டத்தின் ஏனைய கதாநாயகர்கள் போராடியது அதுவல்ல” என்று குறிப்பிட்டார்.

தரூரின் கருத்தை விமர்சித்த, பா.ஜ.கவின் தேசிய பேச்சாளர் சம்பித் பட்ரா, அக்கருத்து “வெட்கக்கேடானது” எனத் தெரிவித்தார். அத்தோடு, பாகிஸ்தானுக்குச் சார்பான கொள்கைகளை, காங்கிரஸ் கொண்டிருக்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .