2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கு 3 மாத காலக்கெடு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தானைச் சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தள்ளிவைக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு 3 மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கவாஜா ஆசிப், நேற்று முன்தினம் (20) இரவு, இதை உறுதிப்படுத்தினார்.

நிதிச் செயற்பாட்டுச் செயலணி எனப்படும் உலகளாவிய அமைப்பின், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலைத் தடுத்தல், பணச்சலவைக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தல் போன்ற விதிகளை ஏற்றுச் செயற்படாத நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தடுக்கவே, பாகிஸ்தான் முயன்று வருகிறது.

இந்தப் பட்டியலில், “சாம்பல் பட்டியல்” எனக்கூறப்படும் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ப்பதற்கு, ஐக்கிய அமெரிக்கா முன்மொழிந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள், ஐ.அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

“சாம்பல் பட்டியல்” என்பது, பயங்கரவாத நிதியளிப்பைத் தடுப்பது தொடர்பாக, போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளுக்கான பட்டியலாகும்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக, நிதிச் செயற்பாட்டுச் செயலணி, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இவ்வாரம் சந்திக்கவிருந்தது. எனினும், தற்போது 3 மாத காலக்கெடு, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பாகிஸ்தானின் இக்கருத்தை உறுதிப்படுத்த, ஐ.அமெரிக்கா மறுத்துவிட்டது. செயலணியின் முடிவுகள், இரகசியமானவை எனவும், பகிரங்கப்படுத்தப்படும் வரை, அவை தொடர்பில் எதுவும் கூற முடியாது என, ஐ.அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .