2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பியொங்யங்கில் சந்திக்கின்றன கொரியாக்கள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தைப் பிரிக்கும் இராணுவமயமற்ற வலயத்தில் இடம்பெற்ற உயர் மட்ட பேச்சுக்களையடுத்து, வடகொரியத் தலைநகர் பியொங்யங்கில் சந்திப்பொன்றை அடுத்த மாதம் நடாத்த வடகொரியாவும் தென்கொரியாவும் நேற்று இணங்கியுள்ளன.

குறிப்பான திகதியொன்றைக் குறிப்பிடாமல், திட்டமிட்டபடி அடுத்த மாதம் பியொங்யங்கில் வட-தென்கொரிய சந்திப்பொன்றை நடாத்த சந்திப்பில் இரண்டு தரப்புகளும் இணங்கியுள்ளதாக இரண்டு தரப்புகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கொரியத் தீபகற்பத்துக்குள்ளேயும் அதைச் சுற்றியும் பதற்றம் நிலவியிருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் பியொங்யங்குக்கு விஜயம் செய்யவுள்ள முதலாவது தென்கொரிய ஜனாதிபதியாக மூன் ஜயே-இன் மாறவுள்ளார்.

இந்நிலையில், வட, தென்கொரிய உறவுகள் இவ்வாறாக முன்னேற்றமடைந்து வருகின்றபோதும் வட கொரியாவின் அணு, ஏவுகணைத் திட்டங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக இரண்டு நாடுகளும் பொருளாதார முன்னெடுப்பை மேற்கொள்ள இயலாது உள்ளதுடன், முக்கிய பிரச்சினையான வடகொரியாவை அணுவாயுதமற்றதாக்குவதில் சிறிது முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், தேங்கு நிலையிலுள்ள ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுகளில் திருப்புமுனையொன்றை ஏற்படுத்துவதற்கான வடகொரியாவின் மூலோபாயமே அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மறுபக்கமாக, மூன் ஜயே-இன் கொரியாக்களுக்கிடையிலான உறவை வளர்க்க விரும்புகின்றபோதும் ஐக்கிய அமெரிக்கா, வட கொரியாவுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமில்லாமல் அது சாத்தியமில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூன் ஜயே-இன்னுக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் பன்முன்ஜொம்மில் இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பில், இலையுதிர் காலத்தில் பியொங்யங்குக்கு தென்கொரிய ஜனாதிபதி விஜயம் செய்வதென இணங்கப்பட்டிருந்தது.

பியொங்யங்குக்கு முதலாவதாகச் சென்ற தென்கொரிய ஜனாதிபதி கிம் டயே-ஜுங் ஆவார். அவர், 2000ஆம் ஆண்டு கிம் ஜொங் உன்னின் தந்தை கிம் ஜொங் இல்லைச் சந்தித்திருந்ததுடன் கொரியாக்களுக்கிடையிலான நட்புறவுக்கான அவரது ஈடுபாட்டுக்காக நோபல் சமாதானப் பரிசை வென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு றொஹ் மூ-ஹயுனும் கிம் ஜொங் இல்லைச் சந்தித்திருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து சந்திப்புகள் இடம்பெறவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .