2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமர் மே-ஐ நிராகரிக்கின்றனர் பிரித்தானிய மக்கள்

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான, தற்போதைய ஐ.இராச்சிய அரசாங்கத்தினதும் அதன் பிரதமரதும் திட்டங்களை, பெரும்பாலான பிரித்தானிய மக்கள் நிராகரிக்கின்றனர் என, கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகை சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பே, பிரதமர் தெரேசா மே மீது, அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, அடுத்தாண்டு மே 29ஆம் திகதி, ஐ.இராச்சியம் வெளியேற வேண்டியுள்ள நிலையில், அதற்கான பேரம்பேசல்கள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், பேரம்பேசல் விடயங்களை, பிரதமர் மே சிறப்பாகக் கையாள்கிறார் என, வெறுமனே 16 சதவீதமான பிரித்தானியர்கள் மாத்திரமே கருதுகின்றனர். மறுபக்கமாக, தெரேசா மே -இன் பேரம்பேசல் திட்டத்தை நிராகரித்துக்கொண்டு, வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்த பொரிஸ் ஜோன்சன், பேரம்பேசலில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்துவார் என, 32 சதவீதமானோர் குறிப்பிட்டுள்ளனர். 

பொரிஸ் ஜோன்சன், கடுமையான வலதுசாரிக் கொள்கைகளை உடையவர் என்ற அடிப்படையில், பிரித்தானிய மக்களின் போக்கு, ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வருவதைப் போன்று, கடும்போக்கு வலதுசாரிக் கொள்கைகளை நோக்கியதாக இருப்பதையும், இது வெளிப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, பிரெக்சிற் தொடர்பில் உறுதியான அர்ப்பணிப்புகளைக் கொண்ட வலதுசாரிக் கட்சியொன்று உருவாக்கப்படுமாயின், அதற்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, 38 சதவீதமானோர் குறிப்பிட்டனர். அதேபோல், குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான, கடும்போக்கு வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட, இஸ்லாத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை வெளிப்படையாகவே வெளிப்படுத்தும் கட்சியொன்றுக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, 25 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .