2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரதமர் மேயின் பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் பெரிய தோல்வி

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தம் 230 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில், ஆட்சியிலுள்ள அரசாங்கமொன்று பெற்ற மிகப்பெரிய தோல்வியாக இது பதிவாகியது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதற்கான நிபந்தனைகளைக் கொண்ட குறித்த ஒப்பந்தத்துக்கெதிராக 432 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை வாக்களித்திருந்த நிலையில் ஆதரவாக 202 பேரே வாக்களித்திருந்தனர்.   

மேயின் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவான, தொடர்வதற்கான ஆதரவான 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது ஒப்பந்ததுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், அவரின் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போராடி ஒப்பந்தமொன்றைப் பெற்ற மேக்கு குறித்த தோல்வி மிகப்பெரிய அடியாகக் காணப்படுகிறது. குறித்த வாக்கெடுப்பானது கடந்த மாதம் இடம்பெறவிருந்தபோதும் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முயல்வதற்காக வாக்கெடுப்பை மே ஒத்திவைத்திருந்தார்.

எவ்வாறாயினும் இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றபோதும் குறித்த தோல்வி காரணமாக எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என்பது சந்தேகத்துக்கிடமானதாகியுள்ளது.

அந்தவகையில், பிரெக்சிற்றை முழுமையாக நிறுத்த அல்லது ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக மேலுமொரு பிரெக்சிற் பொது வாக்கெடுப்பைக் கோருகின்ற, மேம்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை விரும்புகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பலவீனமாகியுள்ள மே செவிசாய்க்க வேண்டியேற்பட்டுள்ளது.

வழமையாக இவ்வாறான தருணங்களில், பிரதமர் பதவியிலிருப்போர் தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வர் என்றபோதும் குறித்த நேற்றைய வாக்கெடுப்பின் பின்னர் உரையாற்றிய மே, தனது பிரதமர் பதவியை தொடரும் நிலையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், குறித்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஜெரெமி கோர்பைன், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பென்றை முன்வைத்திருந்தார். இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்கடிக்கப்படுமாயில் அது பொதுத் தேர்தலொன்றுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பானது இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .