2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரெக்சிற் ஒப்பந்தத்தை அனுமதித்தனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று ரீதியிலான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இலங்கை நேரப்படி நேற்று மாலை அனுமதித்தனர்.

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல் பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களும் ஏறத்தாழ 30 நிமிடத்திலேயே பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு இணங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதியிலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்தே மே தங்களுடன் இணைந்து கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய ஐக்கிய இராச்சிய எதிர்கால உறவுகள் தொடர்பாக அரசியல் பிரகடனத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களும் இணங்கியுள்ளனர் என ஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க் டுவீட் செய்தருந்தார்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட சந்திப்புக்காக சென்றிருந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜூன் கிளாடியோ ஜுங்கர், இது கவலையான நாளெனவும் பெரிய பிரித்தானியா போன்ற நாடொன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது மகிழ்ச்சி அல்லது கொண்டாட்டத்துகான தருணமல்ல இது கவலையான தருணம் இதுவொரு விபத்து எனக் கூறியிருந்தார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக பிரித்தானியாவுடன் பேரம் பேசியிருந்த மைக்கல் பார்னியர், தாங்கள் தொடர்ந்தும் நட்புறவாக, பங்காளர்களாக, நண்பர்களாக இருப்போம் எனக் கூறினார்.

17 மாத கால கடினமான பேரம்பேசல்களில் அடையப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நிதி விடயங்கள், பிரஜைகளின் உரிமைகள், வட அயர்லாந்து, பிரெக்சிற்றுக்குப் பின்னரான 21 மாத கால ஏற்பாடுகளை உள்ளடக்கிக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும் பிரெக்சிற் ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டம் இது கிடையாது. ஏனெனில், இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்ற நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X