2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பிரெக்சிற்றில் 95% பூர்த்தி’

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை ஏற்கெனவே பூர்த்தியாகிவிட்டன என, ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். எனினும், இவ்விடயத்தில் முரண்பாடாக அமைந்துள்ள, வட அயர்லாந்து எல்லை தொடர்பில், தனது திருப்தியின்மையை அவர் வெளிப்படுத்தினார்.

பிரதமர் மே-இன் பிரெக்சிற் திட்டம் தொடர்பாக, உள்நாட்டிலும் அவரது அமைச்சரவைக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன. குறிப்பாக, பிரெக்சிற் நடைமுறைக்கு வருவதற்குச் சில மாதங்களே உள்ள நிலையில், இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படாமை, அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றிய பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தோடு, என்னவாறான வெளியேற்றம் இடம்பெற வேண்டுமென்பது தொடர்பில், அநேகமான விடயங்களில் தெளிவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் இவ்வாறான நம்பிக்கைக்குரிய கருத்துகளுக்கு மத்தியிலும், வட அயர்லாந்து எல்லை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், அவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முடியாது என்ற நிலை காணப்படுகிறது.

ஐ.இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒரே எல்லையாக, வட அயர்லாந்து எல்லையே காணப்படும் நிலையில், அவ்வெல்லையில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்பதில், இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.

பிரதமரின் இவ்வுரையில் அவர், இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகளுக்கான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்த முன்மொழிவை, தான் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .