2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிள்ளைகளைத் தனிமைப்படுத்துவதை நிறுத்தினார் ட்ரம்ப்

Editorial   / 2018 ஜூன் 22 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குள், சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்களிலிருந்து, பிள்ளைகளை மாத்திரம் பிரித்து, அவர்களைத் தனியாகத் தடுத்துவைக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிறைவேற்றுப் பணிப்புரையில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான இந்நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கொள்கையையே, கடும் எதிர்ப்பின் காரணமாக முடிவுக்குக் கொண்டுவர, அவர் சம்மதித்துள்ளார்.

ஆனால், அவரது நிறைவேற்றுப் பணிப்புரையில், ஏற்கெனவே தனியாகப் பிரிக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிக் கவனஞ்செலுத்தப்படவில்லை. ஆகவே, 2,300க்கும் மேற்பட்ட பிள்ளைகள், ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக, இன்னமும் சந்தேகம் நிலவுகிறது.

எனவே, ஏற்கெனவே காணப்பட்ட விமர்சனங்கள், இந்நிர்வாகம் மீது தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

“சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை” என, இந்நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட இக்கொள்கை தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினர், ஜனாதிபதியின் குடியரசுக் கட்சியினர், சர்வதேச சமூகத்தினர் என, பல தரப்பட்டவர்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், இப்பிரச்சினையை, ஐ.அமெரிக்க காங்கிரஸ் மாத்திரமே தீர்க்க முடியுமென, ஜனாதிபதி ட்ரம்ப்பும் அவரது நிர்வாகத்தினரும் கூறிவந்தனர். இப்போது, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறைவேற்றுப் பணிப்புரையொன்றை, ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

ஆனார், குடும்பங்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் நடைமுறை, சட்டமாக அன்றி, வெறுமனே கொள்கையாகவே காணப்படுகிறது. எனவே, அதை இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியின் நிர்வாகம் முடிவெடுத்தாலே போதுமானது என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிறைவேற்றுப் பணிப்புரை, பிள்ளைகளைப் பிரிக்கும் விடயத்தில் தளர்வைக் காட்டினாலும், தமது “சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை” விடயத்தில், எந்தவித விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X