2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புர்காவுக்கான தடையை விமர்சித்து டென்மார்க்கில் போராட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு, டென்மார்க்கில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள தடைக்கெதிராக, அந்நாட்டுத் தலைநகரான கொபென்ஹகெனில், போராட்டமொன்று நேற்று முன்தினம் (01) இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில், சுமார் 1,300 பேர் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா போன்ற, முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தை, இவ்வாண்டு மே மாதத்தில், டென்மார்க் அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. இத்தடை, நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைப் பின்பற்றியே, இத்தடை கொண்டுவரப்பட்டிருந்தது. ஜனநாயக விழுமியங்களையும் மதசார்பற்ற விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டே, இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என, அந்நாடுகள் கூறுகின்றன.

ஆனால், தாம் விரும்பிய ஆடையை அணிவதற்கான உரிமையை, பெண்களிடமிருந்து இத்தடை பறிக்கிறது என, இத்தடைக்கெதிரானவர்கள் முறையிடுகின்றனர். குறிப்பாக, நெதர்லாந்தில், புர்கா அணியும் பெண்களின் எண்ணிக்கை, மிகக் குறைவானது என்ற அடிப்படையில், புர்காவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைகளைத் தணிப்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையிலேயே, புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள், புர்கா அணியாத முஸ்லிம் பெண்களும் ஆண்களும், புர்கா அணிந்த முஸ்லிமல்லாத பெண்கள், புர்கா அணியாத முஸ்லிமல்லாத பெண்களும் ஆண்களும் என, அனைத்துத் தரப்பினரும், இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

புர்கா அணிந்தால், முதலாவது குற்றத்துக்கு 160 ஐ.அமெரிக்க டொலர்களும், நான்காவது குற்றத்துக்கு 1,600 ஐ.அமெரிக்க டொலர்களுமென அபராதம் விதிக்கப்படவுள்ள போதிலும், இப்போராட்டத்தில் புர்கா அணிந்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்படாது, பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனெனில், கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்காக, புர்கா அணிவது, புதிய சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், கட்டாயப்படுத்தி புர்கா அணிவிக்கப்படுவதைத் தடுப்பதே அச்சட்டத்தின் நோக்கமெனவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X