2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பேச்சுவார்த்தைக்கே இடம்கொடுக்காத பாகிஸ்தான் பயங்கரவாதத் தொழிற்சாலை’

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, அறிஞர்களையும் வைத்தியர்களையும் பொறியாளர்களையும் உருவாக்குகின்றது என்றும் ஆனால், பாகிஸ்தானோ, பயங்கரவாதிகளை உருவாக்குகின்றது என்றும், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச் சபை அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், கடந்த வியாழக்கிழமை, பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி பேசினார். அப்போது, காஷ்மிர் பிரச்சினையை எழுப்பினார். பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா, பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், ஐ.நா அவையில், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவு பேசிய சுஷ்மா சுவராஜ்,

“வியாழக்கிழமையன்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, இந்தியா, பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மனித உரிமைகளை, நாங்கள் மீறுவதாகவும் கூறியிருந்தார். அவரது பேச்சைகட கேட்டவர்கள் அனைவரது மனதிலும், ஒரே ஓர் எண்ண அலையே எழுந்தது. அது, ‘மனித உரிமை மீறல், பயங்கரவாதம் குறித்து யார் பேசுகிறார்கள் எனப் பாருங்கள்’ என்பதே, அந்த எண்ண ஓட்டம். மரணத்தையும் மனிதநேயத்தை வேரறுக்கும் பாதகத்தையும், பெருமளவில் அரங்கேற்றும் ஒரு நாடு, இங்கே அரங்கின் நடுவே நின்று, இதைப் பேசுவதா என்றே அனைவரும் கருதினர்.

“பாகிஸ்தானின் நிறுவுநர் ஜின்னாவின் வெளியுறவுக் கொள்கை, அமைதியையும் நட்பையும் வலியுறுத்துவதாக, பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கூறியிருந்தார். எங்கள், பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதலாகவே, பாகிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டி வருகிறார். பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட முயல்கிறார். ஆனால், இந்தியாவின் நட்புகரத்தை, பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது என்பதை, அவர்களே விளக்க வேண்டும்.

“இதற்கு முன்னதாகவும், இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை, சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள, சிம்லா உடன்படிக்கை, லாகூர் உடன்படிக்கை எல்லாம் உருவாக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தலைவர்கள், அவற்றையெல்லாம் மறந்து விடுகின்றனர்.

“இத்தருணத்தில், பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு நான் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும், வெகு சில மணி நேரங்களில் இரு தேசங்களாக பிரிந்துவிட்டன. ஆனால், அதன்பிறகு, இன்று, இந்தியா உலகளவில், தொழில்நுட்ப ஜாம்பவானாகக் கருதப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானோ, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாகவே கருதப்படுகிறது.

“மருத்துவர்கள் உயிர் காப்பர். ஆனால், நீங்கள் உருவாக்கும் பயங்கரவாதிகள், பிறர் உயிரைப் பறிப்பர். நாங்கள் வறுமைக்கு எதிரான யுத்தத்தில், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், பாகிஸ்தானோ, எங்களுக்கு எதிரான யுத்தத்தில் மட்டுமே, முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது” என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X