2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’பொதுமக்களைப் பாதிக்க அனுமதியாதீர்கள்’

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், இராணுவ நடவடிக்கையின் போது உடன்சேதங்களையும் தவிர்ப்பதற்கு, மியான்மாரின் ராக்கைன் மாநிலத்திலுள்ள இராணுவத்தினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என, மியான்மார் உப ஜனாதிபதி ஹென்றி வான் தியோ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்நாட்டின் அரச தலைவியும் வெளிநாட்டு அமைச்சருமான ஆங் சாங் சூ கி, இந்த அமர்வில் கலந்துகொள்ளாத நிலையில், அவருக்குப் பதிலாகவே, இவர் கலந்துகொண்டுள்ளார்.

ராக்கைன் மாநிலத்தில், ஓகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பித்த வன்முறைகளின் காரணமாக, குறைந்தது 420,000 றோகிஞ்சா இன முஸ்லிம்கள், பங்களாதேஷுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் மீது மியான்மார் இராணுவம், தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர்களது வீடுகளை எரிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனினும் தனது உரையில், றோகிஞ்சா முஸ்லிம்கள் மாத்திரமல்லாது, ஏனைய சிறுபான்மையினக் குழுக்களும் இடம்பெயர்ந்துள்ளனர் என, உப ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால், 420,000 றோகிஞ்சா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட ஏனைய சிறுபான்மைக் குழுக்களில், எத்தனை பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை, அவர் குறிப்பிடவில்லை. எனவே, றோகிஞ்சா முஸ்லிம்கள் மீதான கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே, அவர் இக்கருத்தைக் கூறினார் என விமர்சிக்கப்படுகிறது.

ஐ.அமெரிக்கா விமர்சனம்

இதேவேளை, நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், மியான்மார் இராணுவம், தம்மீதான தாக்குதல்களை, மோசமான காட்டுமிராண்டித்தனத்துடனும், கிராமங்களை எரிப்பதன் மூலமாகவும், றோகிஞ்சாக்களை வீட்டை விட்டுத் துரத்துவதன் மூலமாகவும், பதிலடி வழங்குகின்றது எனத் தெரிவித்தார்.

மியான்மாரில் காணப்படும் இந்த நெருக்கடி, முழு உலகுக்குமே ஒரு நெருக்கடி எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா பாதுகாப்புச் சபை, இதற்கு உடனடியானதும் பலமானதுமான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வேண்டுகிறார் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .