2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகாராஷ்ரா சட்டசபைத் தேர்தல்: கூட்டணி முறிவென பா.ஜ.கவை எச்சரிக்கும் சிவ சேனா

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்ரா சட்டசபைத் தேர்தலில் பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி உடைக்கக்கூடும் என சிவ சேனா பாரதிய ஜனதாக் கட்சியை (பா.ஜ.க) எச்சரிக்கிறது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ரா சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் திகதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகவுள்ளது.

இத்தேர்தலில் ஆளும் கட்சிகளான பா.ஜ.க, சிவ சேனா கட்சிகள் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரண்டு அணிகளும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று  மகாராஷ்ரா அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் சிவ சேனா தலைவர் திவாகர் ரோட்டே கருத்துத் தெரிவிக்கையில், பா.ஜ.கவால் சிவ சேனாவுக்கு சம எண்ணிக்கையிலான இடங்கள் வழங்கப்படாவிட்டால், சிவ சேனாவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முறிந்து போகக்கூடும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து சிவ சேனாவின் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான சஞ்சய் ராவுத் இன்று கருத்துத் தெரிவிக்கையில், “வரவிருக்கும் மகாராஷ்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட சிவ சேனாவுக்கு சரி பாதி இடங்களை வழங்கத் தவறினால் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள கட்சி கவலைப்படாது.

அமித் ஷா மற்றும் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் முடிவு செய்யப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்ற பார்முலாவை பா.ஜ.க மதிக்க வேண்டும். நான் கூட்டணியை முறிப்பதைப் பற்றி பேசவில்லை, ஆனால் திவாகர் ரோட்டே கூறியது தவறல்ல” எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .