2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மதுரோவா சுதந்திரமா?’

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவில் காணப்படும் குழப்பத்தில், எந்தத் தரப்புக்கு ஆதரவென்பதை உலகம் தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கோரியுள்ள ஐக்கிய அமெரிக்கா, நிக்கொலஸ் மதுரோவா, சுதந்திரமா என்பதே தற்போது காணப்படும் தெரிவெனவும் தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவின் ஜனாதிபதியென, நிக்கொலஸ் மதுரோ, குவான் குவைடோ ஆகியோர் உரிமைகோருகின்றனர். இதில், தேர்தல் மூலமாக மதுரோ வென்றிருந்தாலும், அத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றன என, சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தோடு, குவைடோவுக்கு, பரந்தளவிலான ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டம், நேற்று முன்தினம் (26) இடம்பெற்றிருந்தது.

இதில் உரையாற்றிய ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, மதுரோவின் “சோசலிசப் பரிசோதனை” காரணமாக, பொருளாதாரம் விழ்ச்சியடைந்து விட்டது எனவும், சாதாரண மக்கள், தமது உணவுக்காகக் குப்பைகளைத் தேடியலைகின்றனர் எனவும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு தேசமும், தமக்கான பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரமிது. சுதந்திரத்துக்கான குழுக்களின் பக்கம் நீங்கள் நிற்கலாம், இல்லாவிட்டால் மதுரோவினதும் அவரது அழிவினதும் பக்கம் நீங்கள் நிற்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

வெனிசுவேலா தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்ட முடிந்தமை, ஐ.அமெரிக்காவுக்கு வெற்றியாகக் கருதப்படுகின்ற போதிலும், சீனாவினதும் ரஷ்யாவினதும் எதிர்ப்பை மீறி, வெனிசுவேலா மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே கருதப்படுகிறது.

ஐ.அமெரிக்கா தவிர, இலத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவும், குவைடோவை அங்கிகரித்துள்ள நிலையில், இன்னும் 7 நாள்களுக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை விடுக்காவிட்டால், தாமும் குவைடோவை அங்கிகரிக்கப் போவதாக, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகியன அறிவித்துள்ளன. ஆனால், இறையாண்மை மிக்க நாட்டுக்குக் காலக்கெடு விடுவிக்க முடியாதென, வெனிசுவேலா பதிலளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .