2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மல்லரின் விசாரணையை சட்டமா அதிபர் நிறுத்த வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதா என்பது தொடர்பாக விசாரணையை, சட்டமா அதிபர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விசாரணைகளின் ஓர் அங்கமாக, ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்புகள் காணப்பட்டனவா என்பது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இக்கோரிக்கை, நீதியைத் தடுப்பதாகும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தனது டுவிட்டர் கணக்கில், தொடர்ச்சியான டுவீட்களைப் பதிந்த ஜனாதிபதி ட்ரம்ப், விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லர் தலைமையிலான விசாரணை, “மரியாதைக் கேடானது” எனக் குறிப்பிட்டார். “இது, மிகவும் மோசமான நிலைமை. சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ், திரிக்கப்பட்ட இந்தப் பலிகொடுக்கும் நடவடிக்கையை இப்போதே நிறுத்த வேண்டும். எமது நாட்டை, மேலும் இது பாதிக்க முன்னர், இவ்வாறு செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா தொடர்பான விசாரணையை, ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்தும் எதிர்த்து வந்த போதிலும், சட்டமா அதிபருக்கு, உத்தரவு வழங்குவது போன்ற கருத்தை, பகிரங்கமாக முதன்முறையாக வெளிப்படுத்தியமை, முக்கியமாகக் கவனிக்கப்பட்டது. அதிலும், பிரசாரக் காலங்களில், ரஷ்யர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்தத் தவறியமையைத் தொடர்ந்து, இவ்விசாரணைகளிலிருந்து விலகியிருப்பதாக, சட்டமா அதிபர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அவ்விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவரிடமே கோரியிருப்பதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இக்கருத்து, கடுமையான எதிர்ப்பைச் சந்தித்த போதிலும், அவருக்கு நெருக்கமான பணியாளர்களும் ஆலோசகர்களும், அவரது கருத்தை நியாயப்படுத்தினர்.

“அது, பணிப்புரை கிடையாது. ஜனாதிபதியின் கருத்து மாத்திரமே” என, வெள்ளை மாளிகையின் பிரசாரச் செயலாளர் சாரா சான்டர்ஸ் குறிப்பிட்டார். இவ்விசாரணை முடிவடைய வேண்டுமென்பது, ஜனாதிபதியின் எண்ணமென அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட வழக்கறிஞரான றூடி ஜூலியானியும், தனிப்பட்ட கருத்து என்பதை வலியுறுத்தியதோடு, ஜனாதிபதியின் டுவிட்டர் பயன்பாட்டை நியாயப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .