2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மியான்மாரில் ’மனிதத்துக்கு எதிரான குற்றங்கள்’ தொடர்பில் விசாரணை?

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் காணப்பட்ட றோகிஞ்சா இன முஸ்லிம்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நீதி அதிகாரம் காணப்படுகிறதா எனத் தீர்ப்பளிக்குமாறு, அந்நீதிமன்றத்தின் போர்க் குற்ற வழக்குத் தொடுநர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் வழக்கைக் கொண்டு செல்வதற்கு, நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என்ற தீர்ப்பு வழங்கப்படுமாயின், வழக்குத் தொடுநரான ஃபட்டோ பென்சூடோ, பல்லாயிரக்கணக்கான றோகிஞ்சாக்கள், மியான்மாருக்கு பங்களாதேஷுக்குச் சென்றமை தொடர்பில் விசாரணை நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறாக, அவர்கள் இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற முடிவு பெறப்பட்டால், மனிதத்துக்கு எதிரான குற்றமாக அது அமையும். ஆனால், விசாரணையொன்று நடைபெற்றால், அதற்கு மியான்மார் ஒத்துழைக்காது என்றே கருதப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், உறுப்பினராக பங்களாதேஷ் உள்ள போதிலும், மியான்மார் இன்னமும் இணைந்துகொள்ளவில்லை. எனவே தான், நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மியான்மாரின் ராக்கைனில், கடந்தாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல், அந்நாட்டு இராணுவத்தினராலும் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, சுமார் 700,000 பேர், பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்விடயத்தில், மியான்மார் மீது ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வையும் விழுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .